என்னை அவமரியாதை செய்துவிட்டனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
என்னை அவமரியாதை செய்துவிட்டனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ADDED : அக் 30, 2025 12:48 PM

பாட்னா: பீஹார் தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை அவமரியாதை செய்துவிட்டார்கள் என பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
பீஹார் மாநிலம், முசாபர்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: சாத் பண்டிகை என்பது நாடகம் என்று காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் கூறியுள்ளனர். பீஹார் மக்கள் இந்த அவமானத்தை பல ஆண்டுகளாக மறக்க மாட்டார்கள். பீஹார் தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை அவமரியாதை செய்துவிட்டார்கள். சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம்.
ஊழல், கொடுமை, தவறான ஆட்சி உள்ளிட்டவை தான் பீஹாரில் ஆர்ஜேடியின் காட்டாட்சி ராஜ்ஜியத்தின் ஐந்து அடையாளங்கள். ஆர்ஜேடி-காங்கிரஸ் உறவு தண்ணீர் மற்றும் எண்ணெய் போன்றது. அம்பேத்கரை காங்கிரஸ்-ஆர்ஜேடி தலைவர்கள் அவமதித்தனர். பீஹாரைக் கொள்ளையடிக்க, எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தைக் கைப்பற்ற ஆர்ஜேடி-காங்கிரஸ் ஒன்றிணைந்தது. பீஹாரில் காட்டாட்சி ராஜ்ஜியத்தின் போது ஆர்ஜேடி கட்சியினர் கொள்ளையடித்தனர். அவர்களது ஆட்சிக் காலத்தில் ஏராளமான குற்றச்சம்பவங்கள் நடந்தது.
பீஹாரின் கலாசாரத்தை உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரப்புவது, மாநில வளர்ச்சியை உறுதி செய்வதற்கு தேஜ கூட்டணி அரசு முன்னுரிமை அளிக்கிறது. ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியினரால் ஒருபோதும் பீஹாரை வளர்ச்சியடையச் செய்ய முடியாது. அவர்களது ஆட்சியில் ஊழல் செழித்து வளர்ந்தது. ஏழைகளின் உரிமைகள் சூறையாடப்பட்டன. அதே நேரத்தில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே செழித்து வளர்கின்றன. இவர்களால் பீஹார் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

