பலாத்காரம் செய்ய முயற்சி; டாக்டருக்கு நர்ஸ் அதிரடி ஆபரேஷன்
பலாத்காரம் செய்ய முயற்சி; டாக்டருக்கு நர்ஸ் அதிரடி ஆபரேஷன்
ADDED : செப் 14, 2024 05:30 AM

பாட்னா: பீஹாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர் உட்பட மூன்று பேர், செவிலியரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீஹாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள முஸ்ரிகரராரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கங்காபூரில், ஆர்.பி.எஸ்., ஹெல்த் கேர் சென்டர் என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. கடந்த 11ம் தேதி இரவு, அங்கு பணிபுரியும் செவிலியர், வீட்டுக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மருத்துவமனை நிர்வாகியும், டாக்டருமான சஞ்சய் குமார் மற்றும் அவரது நண்பர்கள் இருவர், செவிலியரை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றனர்.
சுதாரித்த செவிலியர், டாக்டர் சஞ்சய் குமாரின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்து அங்கிருந்து தப்பித்தார். இது குறித்து, மொபைல் போனில் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதன்படி மருத்துவமனைக்கு விரைந்த போலீசார், டாக்டர் சஞ்சய் குமார் மற்றும் அவரது நண்பர்கள் இருவரை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது: செவிலியரை பலாத்காரம் செய்வதற்கு முன், டாக்டர் சஞ்சய் குமார் உட்பட மூன்று பேர் மருத்துவமனையின் கேட்டை உள்பக்கமாக பூட்டியுள்ளனர். மேலும், கண்காணிப்பு கேமராக்களையும் அவர்கள் அணைத்து விட்டனர். சஞ்சய் குமார் உட்பட மூன்று பேரும் குடி போதையில் இருந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து மதுபானம், செவிலியர் பயன்படுத்திய பிளேடு, ரத்தக்கறை படிந்த ஆடைகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளோம். பீஹாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், அவர்களுக்கு எங்கிருந்து மது வந்தது என்பது குறித்தும் விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.