தோல்வி அடைந்தது காதல்; தண்டவாளத்தில் தலை வைத்த பெண்! ஆனா... அந்த டுவிஸ்ட் வேற லெவல்!
தோல்வி அடைந்தது காதல்; தண்டவாளத்தில் தலை வைத்த பெண்! ஆனா... அந்த டுவிஸ்ட் வேற லெவல்!
ADDED : செப் 11, 2024 10:13 AM

பாட்னா; காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள தண்டவாளத்தில் படுத்த பெண், அங்கேயே படுத்து உறங்கிய வினோத நிகழ்வு பீகார் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
காதல் படுத்தும்பாடு
காதல் என்பது பொதுவானது, அது படுத்தும் பாடு அவரவருக்கே சொந்தமானது. ஆனால் அதில் வித்தியாசமாக காதல் தோல்வியால் ஒரு ரயிலில் இருந்த ஒட்டுமொத்த பயணிகளுமே பாதிக்கப்பட்டனர் என்றால் நம்ப முடிகிறதா?
தண்டவாளம்
பீகார் மாநிலத்தில் தான் அப்படி ஒரு ருசிகர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அம்மாநிலத்தில் மோதிஹாரி பகுதியில் இருந்து முசாபர்பூர் பகுதிக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரயில் சக்கியா ரயில் நிலையம் அருகில் வந்து கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருப்பதை கண்ட ரயில் ஓட்டுநர் திடீரென பதற்றம் அடைந்தார்.
இளம்பெண்
அவசர கால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை வேகமாக நிறுத்தினார். அப்போது ரயிலுக்கும் அவரது உடலுக்கும் சில அடி தூரமே இருந்துள்ளது. பின்னர் ரயில் ஓட்டுநர் அரண்டு போய், நேராக இறங்கிச் சென்று யார் படுத்திருப்பது என்று அருகில் சென்று பார்த்தார். அப்போது வெள்ளை உடை அணிந்த இளம்பெண் ஒருவர் படுத்திருப்பதை கண்டு புரியாமல் தவித்தார். அந்த பெண் இறந்து விட்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என்று உற்றுபார்க்க அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது.
முழு விவரம்
அடுத்த கணமே அந்த இளம்பெண்ணை உலுக்கி ரயில் ஓட்டுநர் எழுப்பி இருக்கிறார். சில நிமிடங்களுக்கு பின் யோசனையுடன் எழுந்த அந்த பெண் என்னவென்று புரியாமல் தவித்துள்ளார். ரயில் ஓட்டுநர் எதற்காக இங்கு படுத்து இருக்கிறாய் என்று கேள்வி கேட்க, அதன் பின்னர் தான் முழு விவரமும் வெளிவந்திருக்கிறது.
காதல்
தண்டவாளத்தில் படுத்து இருந்த இளம்பெண் ஒருவரை மனதார காதலித்து உள்ளார். அவரையே திருமணம் முடிக்கவும் விரும்பி உள்ளார். ஆனால் இவரின் இந்த தெய்வீக காதலுக்கு பெற்றோர் குறுக்கே நிற்க, எவ்வளவோ போராடி பார்த்துள்ளார். காதலுக்கு பச்சைக் கொடி காட்டாமல் பெற்றோர் மல்லுக்கட்டி உள்ளனர்.
தூக்கம்
என்ன செய்வது என்று புரியாமல் தவித்த இளம்பெண், தற்கொலை செய்து கொள்வது என்று தீர்மானித்து, ரயில் தண்டவாளத்தில் படுத்து உள்ளார். ஆனால் பட்டப்பகலில் தண்டவாளத்தில் உயிரை மாய்த்துக் கொள்ள படுத்திருந்த அவருக்கு திடீரென தூக்கம் வர, அங்கேயே நன்றாக படுத்து தூங்கி இருக்கிறார். இந்த முழு விவரத்தையும் கேட்ட ரயில் ஓட்டுநர் அவரை ஆசுவாசப்படுத்தி விட்டு பெண்ணின் வீட்டுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இழுத்துச் சென்றனர்
சிறிது நேரத்தில் விரைந்து வந்த பெண் உறவினர்கள் அவரை அழைத்துச் செல்ல வந்துள்ளனர். அப்போது சீற்றம் அடைந்த பெண், அவர்களுடன் செல்ல மறுத்து மீண்டும் தண்டவாளத்தில் படுக்க எத்தனித்தார். ரெண்டு அடி கொடுத்த அவர்கள், பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். நல்வாய்ப்பாக உயிரை காப்பாற்றிய ரயில் ஓட்டுநருக்கும் அவர்கள் மறவாமல் நன்றி தெரிவித்துச் சென்றனர்.