ADDED : ஏப் 04, 2025 04:08 AM

பெங்களூரு; பீஹாரைச் சேர்ந்த 19 வயது இளம் பெண், தன் அண்ணியுடன், கேரளாவில் கூலி வேலை செய்து வந்தார். அந்த வேலை அவருக்கு பிடிக்காததால், மீண்டும் ஊருக்கு திரும்ப, கடந்த 2ம் தேதி ரயிலில் புறப்பட்டார்.
ரயிலில் வரும்போது, பெங்களூரு, மஹாதேவபுராவில் கூலி வேலை செய்யும் தன் அண்ணனுக்கு போன் செய்து, விஷயத்தை கூறியுள்ளார். அதற்கு அவர், 'ஊருக்கு செல்ல வேண்டாம். பெங்களூரில் வேலை தேடலாம். கே.ஆர்., புரம் ரயில் நிலையத்தில் இறங்கி விடு. நான் வந்து அழைத்து செல்கிறேன்' என்று கூறியுள்ளார்.
இளம்பெண்ணும் நேற்று முன்தினம் அதிகாலை 1:30 மணிக்கு கே.ஆர்., புரம் ரயில் நிலையத்தில் இறங்கினார். அண்ணனும், தங்கையும் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். இந்நேரத்தில் டாக்சியோ, ஆட்டோவோ புக் செய்தால் அதிக கட்டணம் கேட்பர் என்பதால், மஹாதேவபுராவுக்கு நடந்தே செல்ல முடிவு செய்தனர்.
நடந்து சென்றபோது, அவர்களை இருவர் வழிமறித்தனர். அண்ணனை ஒருவர் பிடித்து கொள்ள, மற்றொருவர், இளம்பெண்ணை சாலையின் ஓரத்திற்கு இழுத்து சென்றார். இளம்பெண்ணின் கூச்சல் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் ஓடி வந்தபோது, இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.
உடனடியாக, இருவரையும் பிடித்து சரமாரியாக அடித்து போலீசில் ஒப்படைத்தனர். கைதான இருவரும் அசிப், 28, உர்சின், 30, என்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரிக்கின்றனர்.