ADDED : அக் 08, 2025 10:12 PM

பாலக்காடு, அக். 9---
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வள்ளிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், நேற்று புதுப்பரியாரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு சிகிச்சைக்காக பைக்கில் சென்றார்.
சுகாதார மையம் முன்பாக பைக்கை நிறுத்தி விட்டு, மருத்துவரை கண்டு அரை மணி நேரம் கழித்து திரும்பி வந்தார். அப்போது பைக்கை காணவில்லை. சுகாதார மைய ஊழியர்கள் மற்றும் வியாபாரிகளின் உதவியுடன் நீண்ட நேரம் தேடியும் பைக்கை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதன்பின், ஹேம்மாம்பிகா போலீசில் புகார் அளித்து திரும்பி வரும் போது, புதுப்பரியாரம் 'எஸ்டேட்' சந்திப்பு பகுதியில் தனது பைக்கை வாலிபர் ஒருவர் ஓட்டிச்செல்வதை கண்டார்.
பைக்கை துரத்தி சென்று, அந்த வாலிபரை பிடித்தார். ஊர் மக்களின் உதவியுடன், அவரை சிறைப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில், பைக்கை திருடியவர் முட்டிக்குளங்கரை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், 36, என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருடனை கையும் களவுமாக பிடிக்கும் 'சிசிடிவி' பதிவு காட்சிகள் சமூக ஊடகத்தில் வைரலானது.