ADDED : ஜூலை 18, 2025 08:21 PM

முசாபர்நகர்:டில்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கன்வாரியர்கள் எனும் சிவ பக்தர்கள், சைலன்சர்கள் அகற்றப்பட்ட பைக்குகளில் பயணம் செய்வதை அறிந்து, அந்த பைக்குகளை போலீசார் கைப்பற்ற துவங்கியுள்ளனர்.
வட மாநிலங்களில் உள்ள சிவன் கோவில்களில், கன்வாரியர்கள் எனும் சிவ பக்தர்கள், சிரவண மாத துவக்கத்தில், யாத்திரை செல்வது வழக்கம். உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நகரில் பாயும் புனித கங்கை நதியில் இருந்து நீர் எடுத்து வந்து, அதை தங்கள் ஊர் சிவன் கோவிலில் அபிஷேகம் செய்வது வழக்கம்.
அத்தகைய கன்வாரியார்களில் சிலர், சைலன்சர்கள் அகற்றிய பைக்குகளில், அதிக சத்தமாக செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. முசாபர் நகரின் எஸ்.பி., சத்யநாராயண பிரஜாபதி, அந்த பைக்குகளையும், அவற்றை ஓட்டி வந்தவர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார்.
மேலும், சைலன்சர் இல்லாத பைக்குகளை விற்ற ஹனி என்ற கடைக்காரரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசாரின் அதிரடி நடவடிக்கையில், 15 பைக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன; ஏராளமான சைலன்சர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.