ADDED : செப் 27, 2024 01:11 AM

புதுடில்லி : பில்கிஸ் பானு வழக்கில் அரசுக்கு எதிரான கருத்துகளை நீக்கக் கோரிய குஜராத் அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
குஜராத்தில், 2002ல் நடந்த இனக்கலவரத்தின் போது, 21 வயதான பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது, 3 வயது குழந்தை உட்பட அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் வன்முறையாளர்களால் கொல்லப்பட்டனர். நாடு முழுதும் அதிர்வலைகளை எழுப்பிய இந்த வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை, குஜராத் அரசு முன் கூட்டியே விடுதலை செய்து உத்தரவிட்டது. இதன்படி, கடந்த ஆக. 15, 2022ல் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து பில்கிஸ் பானு உட்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'குஜராத் மாநில அரசு பாலியல் கொடுமை குற்றவாளிகளக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளது. இந்த அச்சம் காரணமாகத்தான் வழக்கின் விசாரணை வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டது' எனக் கூறி விடுதலையை ரத்து செய்தது.
இதையடுத்து, 11 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான விசாரணையில் குஜராத் அரசு மீதான கருத்துகளை நீக்க வலியுறுத்தி அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு, நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் பூயன் ஆகியோர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த வழக்கை சீராய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை' என, கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

