பில்கிஸ்பானு வழக்கு: குற்றவாளிகள் அவகாசம் கோரி மனு தாக்கல்
பில்கிஸ்பானு வழக்கு: குற்றவாளிகள் அவகாசம் கோரி மனு தாக்கல்
ADDED : ஜன 18, 2024 12:13 PM

புதுடில்லி: பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய அவகாசம் கோரி குற்றவாளிகள் கோவிந்த் பாய், ரமேஷ் ருபாய், மிதேஷ் சிமன்லால் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2002ல் குஜராத்தில் இனக் கலவரம் நடந்தது. அப்போது, 21 வயதான, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது, 3 வயது குழந்தை உட்பட, அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர், வன்முறையாளர்களால் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் தண்டனை பெற்ற, 11 பேரை முன்னதாகவே விடுதலை செய்து, குஜராத் அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,'' 11 பேரை முன்னதாக விடுதலை செய்ததை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
குற்றவாளிகள் 11 பேரும் வரும் ஜன.,21ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ''சரணடைய அவகாசம் கோரி குற்றவாளிகள் கோவிந்த் பாய், ரமேஷ் ருபாய், மிதேஷ் சிமன்லால் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மனுவில்,''உறவினர்கள் திருமண நிகழ்ச்சி மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் சரணடைய அவகாசம் வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதியை பெற்று வழக்கு பட்டியலிடப்படும் என நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்துள்ளார்.