உயிர் சக்தி வேளாண் மாநாடு; பெங்களூரில் நாளை துவக்கம்
உயிர் சக்தி வேளாண் மாநாடு; பெங்களூரில் நாளை துவக்கம்
ADDED : அக் 21, 2024 12:13 AM

பெங்களூரு : இந்திய உயிர்சக்தி வேளாண் கூட்டமைப்பின் இரண்டு நாள் மாநாடு, பெங்களூரில் நாளை துவங்குகிறது.
இது குறித்து, அகில இந்திய உயிர் சக்தி வேளாண் அமைப்பின் தலைவர் கே.சந்திரசேகரன் கூறியதாவது:
இந்திய அளவிலான உயிர்சக்தி வேளாண் மாநாடு பெங்களூரில் நாளை, நாளை மறுதினம் என இரண்டு நாட்கள் நடக்கிறது.
'இந்தியாவின் வருங்கால உயிர் சக்தி வேளாண்மையை வடிவமைத்தல்' என்ற தலைப்பில் சர்வதேச மற்றும் இந்தியாவில் உள்ள பல ஆராய்ச்சியாளர்கள், உயிர் சக்தி வேளாண் விவசாயிகள், சிந்தனையாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொள்கின்றனர்.
இவர்கள், தங்களின் அனுபவங்களையும், தொலைநோக்கு நுண்ணறிவையும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். இந்த மாநாடு, இயற்கை விவசாயத்தை ஒட்டியது. உயிர் சக்தி வேளாண்மை வாயிலாக மண்ணின் ஆரோக்கியம், பயிர் உற்பத்தி மற்றும் நிலையான வாழ்வாதாரம் ஏற்படுத்துவது குறித்து, மாநாட்டில் விளக்க காட்சி உரைகள், கருத்தரங்குகள், விவாதங்கள் நடக்கின்றன.
இயற்கை விவசாயத்தில் புரட்சியை உருவாக்கும் விதமாக, ஆஸ்திரியாவின் தத்துவ மேதை டாக்டர் ருடால்ப் ஸ்டைனர் நிகழ்த்திய உரையின், 100ம் ஆண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்படும். மாநாட்டை தொடர்ந்து 24ம் தேதி, உயிர்சக்தி வேளாண் பண்ணையை சுற்றி பார்ப்பதன் வாயிலாக, இது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
ஆரோக்கியமான சுற்றுப்புற சூழல் சார்ந்த ஒரு உணவு உற்பத்தி அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே, இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

