ADDED : நவ 04, 2024 07:00 AM

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் வீட்டுக்குள் மறைந்திருந்த பாகிஸ்தான் பயங்கரவாதியை சுட்டுக் கொல்வதற்கு, பாதுகாப்புப் படையினருக்கு பிஸ்கட் பாக்கெட் உதவியது தற்போது தெரியவந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த உஸ்மான் என்ற முக்கிய தளபதி, நேற்று முன்தினம் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த, 2000ம் ஆண்டுகளில் ஸ்ரீநகரில் இயங்கி வந்த இவர், பாகிஸ்தானுக்கு திரும்பினார். மீண்டும், 2017ல் ஸ்ரீநகருக்கு திரும்பினார். பல பயங்கரவாத சம்பவங்கள் மற்றும் வன்முறைகளில் தொடர்புடைய இவருக்கு, ஸ்ரீநகரின் அனைத்து பகுதிகளும் தெரியும். இவர் ஸ்ரீநகரில் இருப்பது குறித்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை சுற்றி வளைக்க முயன்றனர். அப்போது ஒரு வீட்டுக்குள் அவர் புகுந்து மறைந்து கொண்டார்.
அதைச் சுற்றி, 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதால், பாதுகாப்புப் படையினர் மிகவும் எச்சரிக்கையுடன் நிலைமையைக் கையாண்டனர். உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். பயங்கரவாதி உஸ்மானிடம், ஏ.கே. - 47 ரக துப்பாக்கி, மேலும் சில துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதனால், இடைவெளி விட்டு, அவர்மீது பாதுகாப்புப் படையினர் சுட்டனர். இதற்கிடையே அந்தப்பகுதியில், தெருநாய்களும் சுற்றி வந்தன. இதையடுத்து தங்களுடன் எடுத்து வந்த பிஸ்கெட் பாக்கெட்டுகளை பயன்படுத்தி, தெருநாய்களை அந்த இடத்தில் இருந்து வெளியேற்றினர்.
தொடர்ந்து, ஒன்பது மணி நேரத்துக்கு மேலாக நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின், பயங்கரவாதி உஸ்மான் கொல்லப்பட்டார். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது சாதுர்யமாக செயல்படுவதற்கு, பாதுகாப்புப் படைகள் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகளுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.