ADDED : பிப் 15, 2024 05:15 AM

பெங்களூரு : காதலர் தினத்தில், ஓட்டு போடுவதன் மகத்துவம் குறித்து, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி, முகநுாலில் வினோதமான முறையில் விழிப்புணர்வு செய்துள்ளார்.
லோக்சபா, சட்டசபை, மாநகராட்சி உட்பட ஒவ்வொரு தேர்தலிலும், நகர பகுதிகளில் ஓட்டுப்பதிவு சதவீதம், கிராமங்களை விட குறைவாக தான் பதிவாகிறது.
தலைமை தேர்தல் ஆணையமும், ஒவ்வொரு தேர்தலுக்கும் ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து, வாக்காளர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும், நகர பகுதிகளில் ஓட்டு சதவீதம் உயரவில்லை.
இது குறித்து, அரசியல் கட்சிகளுக்கும் ஆண்டுதோறும் தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில், காதலர் தினத்தை ஒட்டி, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில், புதிய வகையில் விழிப்புணர்வு செய்துள்ளது.
இதற்காக, ஒரு போஸ்டரை, முகநுாலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதில், ஓட்டு போடுவதற்காக வாக்காளர்கள் வரிசையில் நின்றிருக்கின்றனர். ஒரு இளைஞரின் கையை, இளம்பெண் பிடித்துள்ளார். வரிசையில் நின்றிருக்கும் ஒரு பெண், யார் இந்த கனவு பையன் என்று இளம்பெண்ணை கேட்கிறார்.
அதற்கு, பொறுப்புள்ளவராக ஓட்டு போடுவதற்காக வந்துள்ளார். இவர் என்னுடைய கனவு பையன் என்கிறார்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு, ஓட்டு போடுவதன் மகத்துவம் குறித்து, தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு விளக்குங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

