மஹா.,வில் 48-ல் பா.ஜ., 30: தொகுதி பங்கீடு நாளை முடிவு?
மஹா.,வில் 48-ல் பா.ஜ., 30: தொகுதி பங்கீடு நாளை முடிவு?
ADDED : மார் 10, 2024 08:26 PM

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.,தலைமையிலான மகாயுதி கூட்டணி இடையே நாளை தொகுதி பங்கீடு முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ., தலைமையிலான மகாயுதி கூட்டணியில் ஏக்நாத்ஷிண்டே (சிவசேனா) முதல்வராகவும் , பா.ஜ, வின் தேவேந்திரபட்னாவிஸ், மற்றும் தேசிய வாத காங்கிரசின் அஜித்பவார் துணை முதல்வர்களாக உள்ளனர்.
விரைவில் பார்லி., பொது தேர்தல் நடைபெற உள்ளதால் தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. ஒரு சில மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு நடத்தி பேச்சுவார்த்தை நடத்தி அது குறித்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளது.
உ.பி.,மாநிலத்தில் அதிகபட்சமாக 80 தொகுதிகள் உள்ளது. இந்த மாநிலமே பிரதமர் குறித்த தேர்வை தீர்மானிப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதி வருகின்றனர். அதற்கு அடுத்த படியாக மஹாராஷ்டிரா மாநிலம் திகழ்கிறது. காரணம் இங்கு 48 தொகுதிகள் இடம்பெற்று அதிக தொகுதிகள் கொண்ட மாநிலமாக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.,25 தொகுதிகளில் போட்டியிட்டு 23 இடங்களிலும் உத்தவ் தலைமையிலான சிவசேனா 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களிலும் , தேசியவாத காங்கிரஸ் 19 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களிலும் ,காங்கிரஸ்25 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தையும் பெற்றிருந்தன.
தற்போதைய சூழ்நிலையில் ஏக்நாத்ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் 13 எம்.பி.,க்கள் உள்ளனர் உத்தவ் அணியில் 5 எம்.பி.,க்கள் உள்ளனர். அதே போன்று தேசிய வாத காங்கிரஸ் கட்சியின்அஜித்பவார் பிரிவில் ஒரு எம்.பி.,மட்டுமே உள்ளனர். சரத்பாவர் அணியில் மூன்று எம்.பி.,க்கள் உள்ளனர்
இந்நிலையில் மாநிலத்தில் ஆளும் மகாயுதி கூட்டணி இடையே நாளை (திங்கட்கிழமை ) தொகுதி பங்கீடு முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித்பவார் ஆகியோர் இரட்டை இலக்கங்களில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் மொத்தம் உள்ள 48 இடங்களில் பா.ஜ.,30 இடங்களும், ஏக்நாத்ஷிண்டே அணிக்கு 10-12 இடங்களும்., அஜித்பவார் அணிக்கு 4-6 இடங்களும் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜ, வரும் பொது தேர்தலில் மொத்தம் உள்ள 543 இடங்களில் பா.ஜ., மட்டும் தனியாக 370 இடங்களிலும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 400 இடங்களையும் வெல்ல வேண்டும் என இலக்கு நிர்ணயித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

