பா.ஜ., - லோக் ஜன்சக்தி உடன்பாடு பீஹாரில் தொகுதி பங்கீடு முடிவு
பா.ஜ., - லோக் ஜன்சக்தி உடன்பாடு பீஹாரில் தொகுதி பங்கீடு முடிவு
ADDED : மார் 13, 2024 11:19 PM

புதுடில்லி: 'லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடனான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது,'' என முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகனும், ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் கட்சி தலைவருமான சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
பீஹாரில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானின் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் அங்கம் வகிக்கிறது.
வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ள தொகுதி தொடர்பாக அக்கட்சி, கடந்த சில நாட்களாக பா.ஜ.,வுடன் பேச்சு நடத்தி வருகிறது.
இது தொடர்பாக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை, புதுடில்லியில் சிராக் பஸ்வான் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, பீஹாரில் இரு கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து சிராக் பஸ்வான் கூறுகையில், “பீஹாரில் உள்ள லோக்சபா தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தப்பட்டது.
என் கவலைகள் அனைத்தையும் பா.ஜ., தீர்த்து வைத்துள்ளது. தொகுதி பங்கீடு திருப்தி அளிக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அங்குள்ள 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்,” என்றார்.
இரு கட்சிகளின் பேச்சின் முடிவில், பீஹாரில் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் கட்சிக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

