பா.ஜ., - ம.ஜ.த., தொகுதி பங்கீடு டில்லியில் இன்று முக்கிய பேச்சு
பா.ஜ., - ம.ஜ.த., தொகுதி பங்கீடு டில்லியில் இன்று முக்கிய பேச்சு
ADDED : பிப் 22, 2024 07:06 AM
பெங்களூரு: தொகுதி பங்கீடு தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்களுடன், ம.ஜ.த., மாநிலத் தலைவர் குமாரசாமி, அவரது மகன் நிகில் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன், கர்நாடகாவை சேர்ந்த மாநில கட்சியான ம.ஜ.த., சில மாதங்களுக்கு இணைந்தது.
விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., இணைந்து, கர்நாடகாவில் போட்டியிடுகின்றன. தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சு மட்டுமே நடந்தது.
இறுதிகட்ட பேச்சு நடத்துவதற்காக வரும்படி, ம.ஜ.த., தலைவர்களுக்கு பா.ஜ., மேலிடம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அழைப்பை ஏற்று முன்னாள் முதல்வரும், ம.ஜ.த., மாநில தலைவருமான குமாரசாமியும், அவரது மகன் நிகிலும் நேற்று புதுடில்லி சென்றனர்.
தொகுதி பங்கீடு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தேசிய அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
சிக்கபல்லாப்பூர், கோலார், துமகூரு, ஹாசன், மாண்டியா, பெங்களூரு ரூரல் ஆகிய ஆறு தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்கும்படி, ம.ஜ.த., கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.