காங்., வேட்பாளருக்கு ஆதரவாக பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரசாரம்
காங்., வேட்பாளருக்கு ஆதரவாக பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரசாரம்
ADDED : பிப் 14, 2024 04:42 AM

எம்.எல்.சி., தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் புட்டண்ணாவை ஆதரித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர் பிரசாரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
கர்நாடகா சட்டமேலவையில் காலியாக இருக்கும், பெங்களூரு ஆசிரியர் தொகுதிக்கு வரும் 16ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
ஆளுங்கட்சியான காங்கிரஸ் சார்பில் புட்டண்ணாவும், பா.ஜ., - ம.ஜ.த., -கூட்டணி வேட்பாளராக ம.ஜ.த.,வின் ரங்கநாத்தும் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களை ஆதரித்து, கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் புட்டண்ணாவை ஆதரித்து, பெங்களூரு யஷ்வந்த்பூர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர் பிரசாரம் செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி உள்ளது.
இதனால் பா.ஜ., தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சோமசேகர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாநில தலைவர் விஜயேந்திராவிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
சோமசேகர் முன்பு காங்கிரசில் இருந்தவர். அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்து, இடைத்தேர்தலில் வென்று அமைச்சர் ஆனவர். ஆனாலும் பா.ஜ., தலைவர்கள், சிலர் தனக்கு தொல்லை கொடுப்பதாகக் கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார்.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரையும் அடிக்கடி சந்தித்துப் பேசி வருகிறார். அவர் எந்த நேரத்திலும், காங்கிரசில் இணையலாம் என்று கூறப்படுகிறது.

