பா.ஜ., -- எம்.எல்.ஏ., முனிரத்னாவுக்கு மீண்டும் சிறை!: எஸ்.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவு
பா.ஜ., -- எம்.எல்.ஏ., முனிரத்னாவுக்கு மீண்டும் சிறை!: எஸ்.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவு
ADDED : செப் 21, 2024 11:21 PM

பெங்களூரு: பலாத்கார வழக்கில் கைதான பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அமைச்சர்கள் அழுத்தத்தால் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு ஆர்.ஆர்., நகர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, 60. இவர் மீது கடந்த 18ம் தேதி இரவு, ராம்நகர் ககலிபுரா போலீஸ் நிலையத்தில் 40 வயது பெண் பலாத்கார புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, முனிரத்னா மீது ஒன்பது பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஒப்பந்ததாரர், முன்னாள் கவுன்சிலர் ஆகியோரை திட்டிய வழக்கில் ஏற்கனவே முனிரத்னா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு 19ம் தேதி ஜாமின் கிடைத்தது. நேற்று முன்தினம் காலை சிறையில் இருந்து வெளியே வந்த அவரை, சிறை வாசலில் வைத்து ககலிபுரா போலீசார் கைது செய்தனர்.
அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. 10 மணி நேரத்திற்கும் மேல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. நேற்று காலை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் முனிரத்னாவை போலீசார் ஆஜர்படுத்தினர்.
விசாரணையின்போது முனிரத்னாவிடம் நீதிபதி பிரித், “போலீசார் உங்களை ஏதாவது தொந்தரவு செய்தனரா?” என்று கேட்டார். “இல்லை,” என பதிலளித்த முனிரத்னா, “என் மீது பலாத்கார புகார் அளித்த பெண், 'பலாத்காரம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்தது' என்று கூறியுள்ளார். அப்போதே ஏன் புகார் செய்யவில்லை? என் மீது புகார் கொடுத்ததில் அரசியல் உள்ளது.
''ஐந்து ஆண்டுகள் என்னை சிறையில் தள்ள முயற்சி நடக்கிறது. வேண்டும் என்றால் எம்.எல்.ஏ., பதவியை இங்கேயே ராஜினாமா செய்கிறேன். எனக்கு கொடுக்கும் இம்சையை என்னால் தாங்க முடியவில்லை,” என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
அப்போது நீதிபதி, “நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டிய இடம் இது இல்லை. எங்கு செய்ய வேண்டுமோ, அங்கு சென்று செய்யுங்கள்,” என்று கூறினார்.
முனிரத்னாவை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் அனுமதி கேட்கப்படவில்லை.
இதனால் அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பரப்பன அக்ரஹரா சிறையில் முனிரத்னா மீண்டும் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், முனிரத்னாவிடம் விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என, முதல்வர் சித்தராமையாவிடம் ஒக்கலிகா சமூக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் நேற்று முன்தினம் கோரிக்கை வைத்தனர்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வருடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக முதல்வர் கூறியிருந்தார். ஆனாலும், அவருக்கு சில அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, முனிரத்னா மீதான பலாத்கார வழக்கை விசாரிக்க எஸ்.ஐ.டி., அமைத்து நேற்று அரசு உத்தரவிட்டது. சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., - பி.கே.சிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் லாபுராம், சவுமியா லதா, சைமன் இடம்பெற்றுள்ளனர்.