ADDED : பிப் 13, 2024 07:10 AM

பெங்களூரு: சட்டசபை கூட்டத்தொடரில் காங்கிரஸ் அரசை திணறடிக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று கவர்னர் உரையாற்றினார்.
முதல் நாள் சுமுகமாக முடிந்த நிலையில், இன்று முதல் காங்கிரஸ் அரசை திணறடிக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
இதற்காக, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில், பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, லோக்சபா தேர்தல் மாநில பொறுப்பாளர் ராதா மோகன் தாஸ் அகர்வால் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
மூத்த எம்.எல்.ஏ.,க்கள் பசனகவுடா பாட்டீல் எத்னால், சோமசேகர், சிவராம் ஹெப்பார், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
லோக்சபா தேர்தல் நெருங்குவதால், அரசின் தோல்விகளை குறிப்பிட்டு, சட்டசபையில் ஆளுங்கட்சியை திணறடிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.