ADDED : ஜன 18, 2024 05:10 AM

கார்வார்: “எங்களை கன்னத்தில் அறைபவர்களின் தலையை துண்டிப்பவர்கள் நாங்கள்,” என, பா.ஜ., - எம்.பி., அனந்த்குமார் ஹெக்டே மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.
உத்தர கன்னடா தொகுதி பா.ஜ., - எம்.பி., அனந்த்குமார் ஹெக்டே. சில தினங்களுக்கு முன்பு, பாபர் மசூதியை போன்று, பட்கல் மசூதியை இடிப்போம் என, சர்ச்சை கருத்துத் தெரிவித்தார். முதல்வர் சித்தராமையாவையும் ஒருமையில் பேசி இருந்தார். அவர் மீது குமட்டா போலீசார், வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில் தண்டேயில் அனந்த்குமார் ஹெக்டே பேசியதாவது:
ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டும் நபர்கள் நாங்கள் இல்லை. எங்களை கன்னத்தில் அறைபவர்கள், தலையை துண்டிப்பவர்கள் நாங்கள். யுத்த பூமியில் நின்று கொண்டு, பரத நாட்டியம் ஆட வேண்டுமா? நாங்கள் மாவீரர் சந்ததியினர்; கோழைகள் இல்லை.
சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை, முதல்வர் சித்தராமையா ஒருமையில் பேசுகிறார். அவர் பேசுவதால், நாங்களும் பேசுகிறோம். கோபாஷ்டமி சாபத்தால் இந்திரா, ராஜிவ் கோபாஷ்டமி அன்றே இறந்தனர்.
அந்த சாபத்தால், இந்திராவின் குடும்பம் பாதிக்கப்பட்டு உள்ளது. நான் தொகுதி மக்களை, இனி பார்க்க மாட்டேன் என்று நினைத்தேன். ஆனால் கடவுள் எனக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார். உடல்நலக்குறைவால் சிங்கப்பூர் சென்று, சிகிச்சை பெற்றேன். இப்போது உங்கள் முன்பு வந்து நிற்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவரது பேச்சு, சர்ச்சையை கிளப்பியுள்ளது.