பா.ஜ., - எம்.எல்.சி., பெயரில் விஷம் கலந்த ஸ்வீட் பார்சல்
பா.ஜ., - எம்.எல்.சி., பெயரில் விஷம் கலந்த ஸ்வீட் பார்சல்
ADDED : ஜன 05, 2025 11:03 PM

ஷிவமொக்கா:பா.ஜ., - எம்.எல்.சி., பெயரில் அனுப்பப்பட்ட ஸ்வீட் பாக்சில் விஷம் கலந்திருப்பது தெரியவந்ததால், அதை அனுப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஷிவமொக்கா நேஷனல் கல்வி சொசைட்டி செயலர் எஸ்.என்.நாகராஜ் வீட்டுக்கு, ஆங்கில புத்தாண்டு தினத்தன்று பார்சல் வந்து உள்ளது.
இந்த பார்சல் பா.ஜ., - எம்.எல்.சி., தனஞ்செயா என்ற பெயரில் வந்தது. எம்.எல்.சி., அனுப்பிய பார்சல் என்று கருதி, அதை பிரித்து பார்த்துள்ளார்.
பார்சலில், 'ஸ்வீட் பாக்ஸ்' இருந்து உள்ளது. அதிலிருந்து ஒரு துண்டு எடுத்து சுவைத்து பார்த்து உள்ளார். ஆனால், சுவையில் மாற்றம் இருப்பதை உணர்ந்தார்.
இதனால் சந்தேகமடைந்த அவர், ஸவீட்டை சாப்பிடாமல் வைத்தார். இது குறித்து அவர், எம்.எல்.சி., தனஞ்செயாவிடம் கேட்ட போது, 'நான் ஸ்வீட் பாக்ஸ் எதுவும் அனுப்பவில்லையே' என கூறினார்.
இதில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்த எம்.எல்.சி., ஸ்வீட் பாக்சை பரிசோதனை மையத்திற்கு அனுப்பினார். பரிசோதனை முடிவில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது.  அதிர்ச்சி அடைந்த தனஞ்செயா, தனது உதவியாளர் சச்சின் ராஜ் மூலம், கோட்டே போலீசில் புகார் செய்தார்.
போலீசாரின் விசாரணையில், இந்த பார்சல் பத்ராவதியில் இருந்து கூரியர் மூலம் அனுப்பப்பட்டு உள்ளது தெரிந்தது. ஆனால், அனுப்பிய மர்ம நபர் யார் என கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து தனஞ்செயா கூறியதாவது:
எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே, இது போன்ற செயலில் யாரோ ஈடுபட்டு உள்ளனர்.
இந்த ஸ்வீட்டை குழந்தைகள் சாப்பிட்டு இருந்தால், பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். எனவே, மர்ம நபரை கண்டுபிடித்து கைது செய்து, உரிய தண்டனையை போலீசார் பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோன்று பத்ராவதி டாக்டர்கள் அரவிந்த், பவித்ரா ஆகியோர் வீட்டுக்கும் ஸ்வீட் பார்சல் சென்றுள்ளதாக பா.ஜ., - எம்.எல்.சி.,யிடம் தெரிவித்து உள்ளனர்.

