ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., மீது தாக்குதல் பா.ஜ., குண்டர்களை ஏவியதாக குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., மீது தாக்குதல் பா.ஜ., குண்டர்களை ஏவியதாக குற்றச்சாட்டு
ADDED : பிப் 01, 2025 10:11 PM

புதுடில்லி:ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,வும், ரித்தாலா தொகுதி வேட்பாளருமான மொஹிந்தர் கோயல் நேற்று தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, தாக்குதல் நடத்தப்பட்டது. மயங்கி விழுந்த அவர் ரோகிணி அம்பேத்கர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மொஹிந்த கோயல் நேற்று காலை 11:00 மணிக்கு தான் போட்டியிடும் ரித்தாலா தொகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது சிலர், கோயல் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மயங்கி விழுந்த அவரை, ஆம் ஆத்மி தொண்டர்கள் மீட்டு, ரோகிணி அம்பேத்கர் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆம் ஆத்மி மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் சிங், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ தேர்தலில் படுமோசமாக தோல்வி அடைவோம் என்பதை உணர்ந்த பா.ஜ., கடும் விரக்தியில் உள்ளது. அதனால் குண்டர்களை அனுப்பி ஆம் ஆத்மி வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கனவே, முன்னாள் முதல்வர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போது, ரித்தாலா தொகுதி எம்.எல்.ஏ., மொஹிந்தர் கோயல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். ஆனால், தேர்தல் ஆணையம் தூங்குகிறது,”என, கூறியுள்ளார்.
வடமேற்கு டில்லியில் அமைந்துள்ள ரித்தாலா தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் குல்வந்த் ராணா மற்றும் காங்கிரஸ் கட்சியில் சுஷாந்த் மிஸ்ரா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கடந்த 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் ரித்தாலா தொகுதியில் கோயல் வெற்றி பெற்றார்.