வாக்காளர்களுக்கு பா.ஜ., பணப்பட்டுவாடா ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு
வாக்காளர்களுக்கு பா.ஜ., பணப்பட்டுவாடா ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு
ADDED : டிச 27, 2024 12:55 AM
புதுடில்லி:“வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததாக பா.ஜ., தலைவர்கள் மீது, அமலாக்கத் துறையில் ஆம் ஆத்மி புகார் மனு அளித்துள்ளது.
ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங், நேற்று மாலை 4:00 மணிக்கு அமலாக்கத் துறை அலுவலகம் வந்தார். அதிகாரிகளை சந்திக்க 'இ - மெயில்' வாயிலாக அனுமதி பெற்றிருந்ததைக் கூறினார். ஆனால், அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை. அங்கிருந்த அலுவலர்களிடன் தன் புகார் மனுவைக் கொடுத்தார்.
இதுகுறித்து, சஞ்சய் சிங் கூறியதாவது:
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், வரும் சட்டசபைத் தேர்தலில் புதுடில்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், புதுடில்லி தொகுதி வாக்காளர்களுக்கு தலா 1,100 ரூபாய் லஞ்சமாக நேற்று முன் தினம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை பா.ஜ.,வின் முன்னாள் எம்.பி., பர்வேஷ் வர்மா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., மஜிந்தர் சிங் சிர்சா ஆகியோர் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தினால் கோடிக்கணக்கான ரூபாயை மீட்கலாம்.
இதுகுறித்து, ஆதாரத்துடன் எழுத்துப் பூர்வமாக புகார் மனு எடுத்துச் சென்றேன். ஆனால், அமலாக்கத் துறை அதிகாரிகள் என்னைச் சந்தித்து மனுவை வாங்க மறுத்து விட்டனர். அலுவலகத்தில் மனுவைக் கொடுத்துள்ளேன்.
எதிர்கட்சிகள் விவகாரத்தில் சுறுசுறுப்பாக செயல்படும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு, ஆம் ஆத்மி தலைவர்களைச் சந்திக்க நேரமில்லை. அவர்களால், பா.ஜ., கட்டளைப்படி மட்டுமே செயல்பட முடியும். மாநில அரசுகளைக் கவிழ்க்கவும், முதல்வர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்யும் நிறுவனமாக மட்டுமே அமலாக்கத் துறை செயல்பட்டு வருகிறது.
வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் பா.ஜ., தலைவர்கள் மீது சி.பி.ஐ., வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவற்றிலும் புகார் மனு கொடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள பா.ஜ., முன்னாள் எம்.பி., பர்வேஷ் வர்மா, “என் தந்தையும், முன்னாள் முதல்வருமான சாஹிப் சிங் வர்மாவால் துவங்கப்பட்ட சமூக அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வாபிமான் வாயிலாக பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் விதிமுறை அமலுக்கு வரும்வரை ஆதரவற்ற பெண்களுக்கு நிதியுதவி செய்வேன்,”என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., மஜிந்தர் சிங் சிர்சா, “ மஹிளா சம்மன் யோஜ்னா மற்றும் சஞ்சீவனி யோஜ்னா ஆகிய திட்டங்கள் இல்லை என டில்லி அரசே பொது அறிவிப்பு வாயிலாக மக்களை எச்சரித்து விட்டது. இதனால், ஆம் ஆத்மி தலைவர்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். நான் நீண்ட காலமாக ஆதரவற்ற மக்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறேன். இனிமேலும் தொடர்ந்து செய்வேன். மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஏராளமான பணத்தை பதுக்கி வைத்துள்ள கெஜ்ரிவாலும் அதைச் செய்யத் துவங்க வேண்டும்,”என்றார்.