அரசு பங்களா ஆக்கிரமிப்பு 'மாஜி' முதல்வர் மீது பா.ஜ., குற்றச்சாட்டு
அரசு பங்களா ஆக்கிரமிப்பு 'மாஜி' முதல்வர் மீது பா.ஜ., குற்றச்சாட்டு
ADDED : அக் 04, 2024 08:37 PM

புதுடில்லி:பஞ்சாப் மாநில ராஜ்யசபா எம்.பி.,க்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை ஆக்கிரமித்து குடியேறியுள்ளதாக டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.
டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு உச்ச நீதிமன்ற ஜாமினில் உள்ள முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவில் லைன்ஸில் உள்ள அரசு பங்களாவை நேற்று காலி செய்தார்.
தன் குடும்பத்தினருடன் லுடியன்ஸ் டில்லி பெரோஸ்ஷா சாலையில் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., அசோக் மிட்டலுக்கு ஒதுக்கி இருந்த அரசு பங்களாவில் குடியேறினார்.
இந்நிலையில், பெரோஸ்ஷா சாலை பங்களா முன், டில்லி மாநில பா.ஜ., முன்னாள் தலைவர் விஜய் கோயல் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது விஜய் கோயல் கூறியதாவது:
கெஜ்ரிவால் அரசின் ஆடம்பரங்களைப் பயன்படுத்துவதில்லை என கூறியிருந்தார். ஆனால், இப்போது சட்டவிரோதமாக தன் கட்சி எம்.பி.,க்கு அரசு ஒதுக்கியுள்ள பங்களாவில் குடியேறியுள்ளார்.
இதே அரவிந்த் கெஜ்ரிவால் தான் முதல்வர் பொறுப்பேற்ற பிறகு அரசு பங்களா, கார், பாதுகாப்பு ஆகியவற்றைப் பயன்படுத்த மாட்டேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால் இப்போது, ஷீஷ் மஹாலைப் போல கோடிக்கணக்கான மதிப்புள்ள அரசு பங்களாவை குடும்பத்துடன் ஆக்கிரமித்துள்ளார். இது குறித்து, ராஜ்யசபா தலைவரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் செய்வோம்.
கெஜ்ரிவாலின் இரட்டை வேடத்தை டில்லி மக்களிடம் அம்பலப்படுத்துவதே இந்தப் போராட்டத்தின் நோக்கம். முன்னாள் முதல்வராக இருந்தாலும் கெஜ்ரிவால் இப்போது ஒரு எம்.எல்.ஏ., மட்டுமே. அவர் ஒரு எம்.பி.,க்கான அரசு பங்களாவில் அனுமதி இல்லாமல் வசிப்பது சட்டவிரோதம். இந்த பங்களாவில் எம்.பி.,க்கள் தங்கள் அலுவலகப் பணிகளைச் செய்ய மானிய விலையில் வசதிகள் வழங்கப்படுகின்றன. அதேநேரத்தில், ஒரு எம்.பி. தன் அதிகாரபூர்வ அரசு பங்களாவில் இல்லத்தில் நீண்ட காலத்துக்கு மற்றொரு நபரை எப்படி தங்க வைக்க முடியும்? அசோக் மிட்டல் மீதும் ராஜ்யசபா தலைவரிடம் எழுத்துப் பூர்வமாக புகார் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.