காஷ்மீரை தனி நாடாக விரும்பும் அமைப்புடன் தொடர்பு: சோனியா மீது பா.ஜ., குற்றச்சாட்டு
காஷ்மீரை தனி நாடாக விரும்பும் அமைப்புடன் தொடர்பு: சோனியா மீது பா.ஜ., குற்றச்சாட்டு
ADDED : டிச 08, 2024 06:28 PM

புதுடில்லி: காஷ்மீரை தனி நாடாக கருத வேண்டும் எனக்கூறும் நிறுவனத்துடன் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தொடர்பு உள்ளதாக பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது. இந்த அமைப்புக்கு ஜார்ஜ் சோரஸ் நிதியுதவி அளித்து வருகிறார் எனவும் குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக பா.ஜ., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: FDL - AP என்ற தொண்டு நிறுவனத்தின் துணைத்தலைவராக சோனியா உள்ளார். இந்த அமைப்புக்கு ஜார்ஜ் சோரசின் தொண்டு நிறுவனம் நிதியுதவி செய்கிறது. மேலும், காஷ்மீரை தனி நாடாக கருத வேண்டும் என FDL - AP விருப்பம் தெரிவித்து உள்ளது.
சோனியாவுக்கும், காஷ்மீரை தனி நாடாக வேண்டும் என்ற கொள்கை கொண்ட அமைப்புக்கும் உள்ள தொடர்பு என்பது, இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் செல்வாக்கையும், அத்தகைய தொடர்புகளின் தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.சோனியா தலைமையிலான ராஜிவ் காந்தி தொண்டுநிறுவனம், ஜார்ஜ் சோரசின் நிறுவனத்துடன் கூட்டு வைத்து உள்ளது. இது இந்திய நிறுவனங்களில், வெளிநாட்டு நிதியின் ஆதிக்கத்தை காட்டுகிறது. சோரஸ் நிதியுதவி அளிக்கும் ஓபன் சொசைட்டி தொண்டு நிறுவனத்தின் துணைத்தலைவரான சலீல் ஷெட்டி, ராகுலின் பாரத் ஜோடோ பாத யாத்திரையில் அவருடன் சேர்ந்து பங்கேற்றார்.
அதானி குறித்த ராகுலின் நேரடி பேட்டியை ஜார்ஜ் சோரஸ் நிதி அளிக்கும் occrp என்ற அமைப்பு நேரலை செய்தது. அதானியை விமர்சனம் செய்ய இந்த அமைப்பை ராகுல் ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறார். இது, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற வலிமையான மற்றும் ஆபத்தான உறவையும், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற அவர்களின் நோக்கத்தையும் காட்டுகிறது. ஜார்ஜ் சோரஸ் பழைய நண்பர் என சசிதரூர் கூறியுள்ளார். இது கவனிக்கத்தக்க ஒன்று.இவ்வாறு அந்த அறிக்கையில் பா.ஜ., கூறியுள்ளது.