பீஹார் சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீட்டில் பா.ஜ., சுறுசுறு!: அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது ஜே.டி.யு.,
பீஹார் சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீட்டில் பா.ஜ., சுறுசுறு!: அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது ஜே.டி.யு.,
ADDED : ஜூன் 08, 2025 12:25 AM

பாட்னா, ஜூன் 8-பீஹாரில் இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை விட, ஜே.டி.யு., எனப்படும் ஐக்கிய ஜனதா தளம், அதிக தொகுதிகளில் போட்டியிடலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கும், தொகுதி பங்கீட்டில், 'ஜாக்பாட்' அடிக்கக்கூடும் என, கூறப்படுகிறது. தொகுதி பங்கீட்டு பேச்சுகளை துவங்கி, தேர்தல் பணிகளில் பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தேர்தல் நடக்கிறது.
தேர்தலில் வென்று ஆட்சியை மீண்டும் தக்க வைக்க, ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ரகசிய சர்வே
பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ராம்விலாஸ் பஸ்வான், ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில், பீஹார் முன்னாள் துணை முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., கூட்டணியும் பணியாற்றி வருகிறது.
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பீஹாரில் உள்ள 40 இடங்களில், பா.ஜ., 17 இடங்களில் போட்டியிட்ட நிலையில், ஐக்கிய ஜனதா தளம், 16 இடங்களில் களமிறங்கியது.
லோக் ஜனசக்தி ஐந்து இடங்களில் போட்டி யிட்ட நிலையில், ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகியவை தலா ஒரு இடத்தில் போட்டியிட்டன.
இதில், பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் தலா 12 இடங்களில் வென்ற நிலையில், லோக் ஜனசக்தி போட்டியிட்ட ஐந்து இடங்களையும் கைப்பற்றியது.
ஹரியானா, மஹாராஷ்டிரா மற்றும் டில்லியில் நடந்த சட்டசபை தேர்தல்களில் வென்ற பா.ஜ., பீஹாரிலும் ஆட்சியை தக்கவைக்க தீவிரமாக பணியாற்றி வருகிறது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பீஹார் முழுதும் அக்கட்சி சார்பில் ரகசிய சர்வே நடத்தப்பட்டுள்ளது. அதில், எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த பகுதிகளில் ஆதரவு அதிகம், மக்களிடம் பிரபலமான உள்ளூர் நிர்வாகிகள் யார்; வேட்பாளராக யாரை நிறுத்தலாம்; யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
துவங்கவில்லை
இந்நிலையில், பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை விட ஒருசில தொகுதிகளில், முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அதிகமாக போட்டியிடலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. 243 சட்ட சபை தொகுதிகளில், 102 - 103 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட வாய்ப்புள்ளது.
அதே சமயம், 101 - 102 தொகுதிகளில் பா.ஜ., களமிறங்கலாம் என, கூறப்படுகிறது. மீதமுள்ள, 43 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கூட்டணி கட்சிகளில் அடுத்த பெரிய கட்சியான, மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்திக்கு, 25 - 28 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என, கூறப்படுகிறது.
ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சாவுக்கு 6 - 7; ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சாவுக்கு, 4 - 5 இடங்கள் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தேர்தல் நெருக்கத்தில் வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., கூட்டணியில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சே இன்னும் துவங்கவில்லை என, கூறப்படுகிறது.