ADDED : பிப் 20, 2024 11:31 PM
உத்தர கன்னடா : லோக்சபா தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், பா.ஜ., நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்து, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
லோக்சபா தேர்தலுக்கு கட்சியினர் தயாராகி வரும் வேளையில், உத்தர கன்னடா மாவட்டத்தின் பா.ஜ., நிர்வாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது.
பட்டியல் வெளியானவுடன் சித்தாபூரின் சிறப்பு அழைப்பாளர்களாக இருந்த நாகராஜ் நாயகா பெட்கானி, கிருஷ்ணமூர்த்தி மடிவாலா, மண்டல பொதுச் செயலர் மேஸ்தா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
ஏமாற்றம்
இதுதொடர்பாக நாகராஜ் நாயகா கூறியதாவது:
கட்சிக்கு விசுவாசமாக உழைக்கும் தொண்டர்களுக்கு பதவி வழங்கப்படவில்லை. சில தலைவர்களின் சூழ்ச்சியால், தகுதி இல்லாதவர்களும் பதவி பெறுகின்றனர். எனவே ராஜினாமா கடிதத்தை மாவட்ட பிரிவு தலைவருக்கு 'வாட்ஸாப்' மூலம் அனுப்பியுள்ளேன.
கடந்த காலத்தில் மாவட்ட அளவில் பதவி வகித்தவர்கள், இம்முறை அதற்கு குறைவான பதவிக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தொடர்ந்து இரண்டு முறை மாவட்ட பதவியில் இருந்த தலைவருக்கு, இம்முறை மண்டல பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதிக ஓட்டு வங்கி கொண்ட தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்களாக கருதப்படுகின்றனர். மாவட்ட அளவில் பெரிய பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
சோகம்
தொண்டர்கள் கூறுகையில், 'கட்சி நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, எங்களிடம் கருத்து கேட்கவில்லை. சில தலைவர்கள், தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பதவி கொடுக்கின்றனர். இதனால் கட்சியின் விசுவாசமான தொண்டர்கள் சோகத்தில் தள்ளப்பட்டு உள்ளோம்' என்றனர்.
நிர்வாகிகள் மாற்றப்பட்ட சில நாட்களில் மூன்று பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், கட்சிக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என பா.ஜ., தலைவர்கள் கருதுகின்றனர். இவர்களை, தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், உத்தர கன்னடாவில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில் ஐந்தில் காங்கிரஸ், மூன்றில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.

