விடாது கருப்பு! நில முறைகேட்டில் சித்தராமையாவை தொடர்ந்து கார்கே மீது பா.ஜ., புகார்
விடாது கருப்பு! நில முறைகேட்டில் சித்தராமையாவை தொடர்ந்து கார்கே மீது பா.ஜ., புகார்
ADDED : ஆக 27, 2024 05:51 PM

புதுடில்லி: கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளைக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது. கார்கே பதவி விலக வேண்டும் என பா.ஜ., கூறியுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை வாங்கி கொடுத்ததாக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் சமூக ஆர்வலர் புகார் தெரிவித்தார். இது குறித்து வழக்குத்தொடர கவர்னர் அனுமதி அளித்தார். இது சித்தராமையாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கவர்னரின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடி உள்ளார்.
இந்நிலையில், டில்லியில் நிருபர்களை சந்தித்த பா.ஜ., செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது: எங்கு சென்றாலும் ஊழல் செய்வோம் என்பது காங்கிரசின் புது முழக்கமாக மாறி உள்ளது. ஊழலுக்கு இணையாக காங்கிரஸ் மாறிவிட்டது என சொல்வதில் தவறு கிடையாது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா மேற்பார்வையில் மூடா மற்றும் வால்மீகி வளர்ச்சி கழக ஊழல் நடந்ததை நாம் பார்த்தோம். தற்போது கார்கே குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளைக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. கார்கே, அவரது மனைவி, மருமகன் ராதாகிருஷ்ணா, மகன்கள் பிரியங்க் கார்கே மற்றும் ராகுல் கார்கே ஆகியோர் இதை நடத்துகின்றனர்.
அந்த நிலத்தை கேட்டு பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பம் செய்தும், அது ஏற்கப்படவில்லை. மாறாக எந்த விதிகளையும் பின்பற்றாமல் கார்கே குடும்பத்தினரின் அறக்கட்டளைக்கு அந்த நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கார்கேவும், அமைச்சர் பதவியில் இருந்து அவரது மகனும் பதவி விலகுவதுடன், இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ., நேர்மையாக விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

