தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/எப்போதும் 'கேட்ச்'ஐ விடும் பா.ஜ.,

எப்போதும் 'கேட்ச்'ஐ விடும் பா.ஜ.,

எப்போதும் 'கேட்ச்'ஐ விடும் பா.ஜ.,


UPDATED : ஏப் 07, 2026 04:18 AM

ADDED : ஏப் 07, 2026 04:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 07, 2026 04:18 AM ADDED : ஏப் 07, 2026 04:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

முதல்வர் ஸ்டாலின், ஒரு நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து வேறு மாவட்டத்திற்கு போகிறார் என்றால், அந்த மாவட்டத்தில் எந்த அளவிற்கு பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் இருக்கும் என்பது, ஐந்தாண்டுகளாக அனைவரும் கண்டதே.

முதல்வரை வரவேற்க மேள தாளத்தோடும், பூங்கொத்துகளோடும், பரிசுப் பொருட்களோடும் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் வரவேற்க காத்திருப்பர்; அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் கொடுக்கப்படும்; அந்த மாவட்ட செயலரும் பொறுப்பு அமைச்சரும், முதல்வர் வருகையை தங்களுக்கு ஆதாயமாக பயன்படுத்திக்கொள்ள பாடுபடுவர். முதல்வர் வந்திருக்கிறார் என்று அந்த மாவட்டத்தில் தெரியாதவர் இல்லாத அளவுக்கு, தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.

கடந்த 4ம் தேதி, புதுச்சேரியில் நடந்த பிரசார 'ரோடு ஷோ'வில் கலந்துகொண்டு, அன்று இரவே சென்னை வந்தார் பிரதமர் மோடி. அன்று இரவு முழுதும் சென்னையில் தங்கிவிட்டு, மறுநாள் மதியம் தான் அவர் டில்லி புறப்பட்டு சென்றார். ஆனால், அவர் எங்கும் பிரசாரம் செய்யவில்லை. காரணம், தமிழக பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்யவில்லை. பிரசாரம் ஏன், ஏர்போர்ட்டில் இருந்து ஹோட்டலுக்கு பிரதமர் வரும் வழியில், வரவேற்பாவது ஏற்பாடு செய்திருக்கலாம், அதை கூட செய்யவில்லை.

நாட்டின் பிரதமரே தமிழகத்திற்கு வந்தார்; அரை நாளுக்கும் மேலாக தங்கினார். ஆனால், அவர் வந்ததும் தெரியவில்லை, கிளம்பிப் போனதும் தெரியவில்லை; தமிழக பா.ஜ.,வினர் பிரதமரின் வருகையை, கட்சியின் வளர்ச்சிக்காக, ஓட்டு சேகரிப்பதற்காக துளி அளவும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இது, பிரதமர் அலுவலகத்தை சேர்ந்தோரே வருத்தப்படும் அளவுக்கு சென்றுள்ளது.

பிரதமரை, சென்னையில் ஒரு சில இடங்களிலாவது தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தி இருக்கலாமே என, தமிழக பா.ஜ., தலைவர்கள் சிலரிடம் கேட்டபோது, 'பிரதமர் தமிழக வருகையின் போது, சென்னையின் தி.நகர் மற்றும் மயிலாப்பூர் என இரு தொகுதிகளிலும் ரோடு ஷோ நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட அந்த நாளில் தனக்கு வெளியூரில் பிரசார பயணத் திட்டம் இருக்கிறது.

தன்னால் பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என, தே.ஜ., கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை தாங்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால், பிரதமரின் ரோடு ஷோவுக்கு ஏற்பாடு செய்ய முடியாமல் போய்விட்டது' என்று காரணம் சொல்கின்றனர், சில மூத்த பா.ஜ., தலைவர்கள். அதாவது, பழனிசாமியிடம் பேசி, பிரதமர் நிகழ்ச்சிக்கு கூட அவர்களால் வரவழைக்க முடியவில்லை.

ஏர்போர்ட் வரவேற்பாவது ஏற்பாடு செய்திருக்கலாமே என கேட்டதற்கு, 'பிரதமர் எப்போது தமிழகம் வந்தாலும், ஏர்போர்ட் முதல் அவர் செல்லும் இடம் வரை, சில இடங்களிலாவது வரவேற்பு அளிப்பது வாடிக்கை. இதை செய்யலாம் என திட்டமிட்டு, அதை கட்சியின் துணைத் தலைவர் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்தனர். ஆனால், அவர் தன்னால் அதை செய்ய முடியாது என மறுக்க, வரவேற்பு திட்டத்தை கைவிட்டு விட்டனர்' என தெரிவித்தனர். பிரதமருக்கு வரவேற்பு கொடுக்கும் அளவிற்கு கூட சிரத்தையாக இல்லை தமிழக பா.ஜ.,வினர்.

இதை எல்லாம் மீறி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் எப்பாடுபட்டாவது பா.ஜ., தமிழகத்தில் காலுான்ற வேண்டும் என்று, மத்தியில் இருந்து தங்களால் இயன்ற ஆதரவை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தான், வேட்பு மனு தாக்கலின் போது, பா.ஜ., வேட்பாளர்களை பிரமாண்டமாக காட்ட வேண்டும், வேட்பு மனு தாக்கலே பேசுபொருளாக வேண்டும் என்பதற்காக, நேற்று, இரண்டு மாநில முதல்வர்களையும், மத்திய அமைச்சர்களையும் வேட்பாளர்களுடன் செல்ல ஏற்பாடு செய்தனர்.

முதல்வர்கள், அமைச்சர்கள்


நேற்று, பா.ஜ., வேட்பாளர்களுடன் சென்ற முக்கியஸ்தர்கள்:

சாத்துாரில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உடன் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்

மதுரை தெற்கில், ராம சீனிவாசனுடன் மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ்

கோவை வடக்கில், வானதியுடன் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா

சென்னை -மயிலாப்பூரில், தமிழிசையோடு மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல்

அவினாசியில், எல்.முருகனுடன் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

தளியில், நாகேஷ் குமாருடன் மத்திய அமைச்சர் சத்தியகுமார் யாதவ்

நாகர்கோவிலில், எம்.ஆர்.காந்தியுடன் பா.ஜ.,வின் தேசிய செயலர் அரவிந்த் மேனன்.

இவ்வாறு, மேற்படி பட்டியல் உள்ளிட்ட 27 தொகுதிகளில், அநேக தொகுதிகளுக்கு முக்கியஸ்தர்களை அனுப்பி வைக்க பா.ஜ., மேலிடம் திட்டமிட்டது. இதில், சிலரால் கடைசி நேரத்தில் வர முடியாமல் போனது. ஆனால், வந்தவர்கள் அனைவரும் நம் நாட்டில் முக்கியமான புள்ளிகள்.

அவர்களோடு பிரசாரம் மேற்கொண்டு இருந்தால், 'டபுள் இன்ஜின்' அரசின் நன்மையை வாக்காளர்களுக்கு எடுத்துரைத்து இருக்கலாம். அந்த பிரசாரம், ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு அச்சாகியும் இருக்கும். அதற்கும் மேலாக, 'உங்கள் வருங்கால எம்.எல்.ஏ.,வுக்கு மத்திய அமைச்சர்கள் இணக்கமானவர்கள்' என்ற செய்தியை சொல்லாமல் சொல்லலாம்;

கூட்டணி கட்சிகளிடம் பா.ஜ., தொண்டர்கள் மீது மதிப்பு ஏற்படும்; 'சீட்' கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஒருங்கிணைக்க முடியும் என்பது தான் பா.ஜ., மேலிடத்தின் கணக்கு.

இந்த வாய்ப்பையும் தமிழக பா.ஜ., பயன்படுத்தவில்லை. அந்த முக்கியஸ்தர்களுடன், நேற்று எந்த பிரசாரமும் நடக்கவில்லை. அவர்கள் வரும் விஷயத்தை கூட வேட்பாளர்களோ தமிழக பா.ஜ.,வோ விளம்பரப்படுத்தவில்லை. வேட்பு மனு தாக்கலுக்கு பின், ஊடகங்களுக்கு சிறிய பேட்டிகளை வழங்கிய அவர்கள், வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

பா.ஜ., மேலிடமும் இதோடு விடுவதாக இல்லை. இன்னும் பல பா.ஜ., முக்கியஸ்தர்கள், பிரசாரத்திற்காக தமிழகம் வரவுள்ளனர். மிகுந்த சிரத்தை எடுத்து வரவழைக்கப்பட உள்ள அவர்களை, தமிழக பா.ஜ., சரியாக பயன்படுத்தாது என்றே தோன்றுகிறது. பா.ஜ.,வினர் துாங்கிக்கொண்டு இருந்தாலும், தமிழக முதல்வர் விழிப்பாகவே இருக்கிறார். மற்ற மாநில முதல்வர்களும், மத்திய அமைச்சர்களும் வருவதை கண்டு, 'தமிழ் மண்ணில் நின்று மும்மொழி கொள்கையை அமல்படுத்துவோம் என்று மத்திய அமைச்சர்களும், பா.ஜ., ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களும் பிரசாரம் செய்யத் தயாரா? நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு தருவது எவ்வளவு? பா.ஜ.,வால் ஆளப்படும் செல்லக் குழந்தைகள் மாநிலங்களுக்கு தருவது எவ்வளவு என வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் எப்.சி.ஆர்.ஏ., சட்ட திருத்தத்தை முழுமையாக திரும்ப பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே பார்லிமென்டில் அதை நிறைவேற்ற போகிறீர்களா? இவற்றுக்கெல்லாம் பழனிசாமியால், தன் டில்லி ஓனர்களிடம் பதில் பெற்று தர முடியுமா?' என்று, நேரத்தையும் சந்தர்ப்பத்தையும் வீணடிக்காமல் அறிக்கை வெளியிட்டு 'ஸ்கோர்' செய்துவிட்டார்.

ஆனால், அமித் ஷாவும் மோடியும் எவ்வளவு தான் செம்மையாக பந்து வீசி, எதிர்க்கட்சி பேட்ஸ்மேனை 'கேட்ச்' கொடுக்க வைத்தாலும், உள்ளூர் பா.ஜ.,வினர் அதை பிடிக்க தெரியாமல் கேட்சை விட்டுவிடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us