பரமேஸ்வர் வீடு முற்றுகை பா.ஜ., - ம.ஜ.த.,வினர் கைது
பரமேஸ்வர் வீடு முற்றுகை பா.ஜ., - ம.ஜ.த.,வினர் கைது
ADDED : டிச 09, 2024 06:51 AM

துமகூரு: ஹேமாவதி நதி நீரை, மாகடிக்கு மாற்றும் அரசின் திட்டத்தை கண்டித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வீட்டை முற்றுகையிட முயற்சித்த பா.ஜ., - ம.ஜ.த.,வினர் கைது செய்யப்பட்டனர்.
துமகூரு மாவட்ட குடிநீர் வினியோகத்திற்கு ஹேமாவதி நதி பயன்படுத்தப்படுகிறது. இந்த நீரை, மாகடிக்கு கால்வாய் மூலம் இணைப்பு ஏற்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., - ம.ஜ.த., நேற்று முன்தினம் போராட்டத்தை துவக்கினர். நேற்று காலையில் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்தனர்.
ஆனால், குப்பியில் இருந்து துமகூரு நகரை நோக்கி பா.ஜ., - ம.ஜ.த.,வினர் ஊர்வலமாக வந்தனர். அப்போது மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தியவர்கள், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் வீட்டை முற்றுகையிட புறப்பட்டனர்.
இதற்கு போலீசார், 'கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த தான் அனுமதி அளிக்கப்பட்டது' என்று கூறி தடுத்தனர்.
இதை பொருட்படுத்தாத கட்சியினர், தடையை மீறி புறப்பட முயற்சித்தனர். அவர்களை தடுத்த போலீசார், கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். பின் மாலையில் விடுவித்தனர்.
தடையை மீறி செல்ல முற்பட்ட பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா கைது செய்யப்பட்டார்.