300 யூனிட் இலவச மின்சாரம் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கிறது பா.ஜ.,
300 யூனிட் இலவச மின்சாரம் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கிறது பா.ஜ.,
ADDED : ஜன 09, 2025 10:10 PM
சாணக்யாபுரி:பெண்களுக்கு உதவித்தொகை, 300 யூனிட் இலவச மின்சாரம் ஆகியவற்றை தேர்தல் அறிக்கையில் வெளியிட பா.ஜ., முடிவு செய்துள்ளது.
அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன. பெண்களுக்கு 2,500 ரூபாய் மாதாந்திர உதவித்தொகையாக அளிக்கப்படுமென காங்கிரஸ் அறிவித்தது.
பா.ஜ.,வின் நிலைப்பாடு குறித்து எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது தொடர்பாக டில்லி பா.ஜ., தேர்தல் அறிக்கை குழு பட்டியல் தயாரித்துள்ளது.
அதில், பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500, தனிநபர்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம், வழிபாட்டுத் தலங்களுக்கு 500 யூனிட்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட
டில்லி பா.ஜ., தேர்தல் அறிக்கை குழு பரிந்துரைத்துள்ளதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
தேர்தல் அறிக்கை குழுவின் பரிந்துரைகள், மத்திய தலைமையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. தேசியத் தலைவர்களின் ஒப்புதலுக்குப் பிறகு, இந்தத் தேர்தல் வாக்குறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கை விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இவற்றுடன், ஆளும் ஆம் ஆத்மி கட்சி அறிமுகப்படுத்திய பெண்களுக்கான பேருந்துப் பயணம் மற்றும் முதியோருக்கான யாத்திரை உள்ளிட்டவை தொடரும் என, பா.ஜ., ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

