ஹனுமன் சாலிசா பாடியவர் மீது தாக்குதல் பேரணி செல்ல முயன்ற பா.ஜ.,வினர் கைது
ஹனுமன் சாலிசா பாடியவர் மீது தாக்குதல் பேரணி செல்ல முயன்ற பா.ஜ.,வினர் கைது
ADDED : மார் 20, 2024 01:39 AM

பெங்களூரு : பெங்களூரில் ஹனுமன் சாலிசா கேட்ட வாலிபரை, இளைஞர்கள் தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து, நேற்று தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற ஹிந்து அமைப்பினர், பா.ஜ., தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு நகரத்பேட்டில், மொபைல் போன் கடை வைத்திருப்பவர் முகேஷ். கடந்த 17ம் தேதி, தனது கடையில், 'ஹனுமன் சாலிசா' பாடல் கேட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் கும்பல், தொழுகையின் போது எதற்காக, ஹனுமன் சாலிசா பாடல் போட்டாய் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.
முகேஷை சாலையில் தள்ளி சரமாரியாக தாக்கினர். காயமடைந்த முகேஷ், ஹலசூரு கேட் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், மூன்று பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இதை கண்டித்து, பல்வேறு ஹிந்து அமைப்பினர் நேற்று, முகேஷ் கடை முன்பு கூடினர். அங்கிருந்து ஹனுமன் சாலிசா பாடல் பாடியவாறு, ஊர்வலமாக சென்றனர். மத்திய இணை அமைச்சர் ஷோபா, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா உட்பட நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அவர்களை தடுத்த போலீசார், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அனுமதி அளிக்க முடியாது என்றனர்.
இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கிருந்த முகேஷை போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.
இதனால் கோபமடைந்த பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் குமார், போலீஸ் வாகனம் முன் நின்று போராட்டம் நடத்தினார். அவருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.
இறுதியாக போலீஸ் வாகனத்தில் இருந்த முகேஷை, ஹிந்து அமைப்பினர் கீழே இறக்கினர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, மத்திய இணை அமைச்சர் ஷோபா, எம்.பி., தேஜஸ்வி சூர்யா உட்பட ஹிந்து அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

