பெண்களுக்கு எதிரான கட்சி ஏ.ஏ.பி., மீது பா.ஜ., பாய்ச்சல்
பெண்களுக்கு எதிரான கட்சி ஏ.ஏ.பி., மீது பா.ஜ., பாய்ச்சல்
ADDED : ஜன 24, 2025 08:06 PM
புதுடில்லி:“ஆம் ஆத்மி பெண்களுக்கு எதிரான கட்சி,”என, பா.ஜ., - எம்.பி., அனுராக் தாக்குர் கூறினார்.
புதுடில்லி தொகுதி பா.ஜ., வேட்பாளர் பர்வேஷ் வர்மாவை ஆதரித்து நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் எம்.பி., அனுராக் தாக்குர் பேசியதாவது:
டில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு பெண்கள் நலனை புறக்கணித்து வருகிறது. பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி தருவதாக பட்ஜெட்டில் அறிவித்தது. ஆனால், இன்றுவரை வழங்கவில்லை. ஆனால், மீண்டும் வெற்றி பெற்றால், மாதந்தோறும் 2,100 ரூபாய் தருவதாக வாக்குறுதியை மட்டும் அறிவித்துள்ளது.
டில்லியின் பேரழிவான ஆம் ஆத்மி கட்சியினர், ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவாலை, முதல்வராக இருந்த கெஜ்ரிவால் பங்களாவுக்கு வரவழைத்து தாக்கினர்.
அதேபோல, 'ஆஷா' இல்ல ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அங்கு பராமரிக்கப்படும் பெண்களின் அவலநிலையை போக்கவும் ஆம் ஆத்மி அரசு தயாராக இல்லை.
முதல்வர் பதவி வகிக்கும் ஆதிஷி சிங் படம், ஆம் ஆத்மி கட்சியின் போஸ்டர்கள் மற்றும் பேனர்களில் பொறிக்கப்படுவதில்லை. இதில் இருந்தே, ஆம் ஆத்மியின் பெண்களுக்கு எதிரான போக்கை உணர முடியும்.
டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதந்தோறும் 2,500 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மேலும், 500 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர் மற்றும் ஹோலி மற்றும் தீபாவளிப் பண்டிகைக்கு இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
ஆம் ஆத்மி கட்சியில் நேர்மையான தலைவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், திரிபுரா, மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் அர்ப்பணிப்புள்ள கட்சித் தொண்டர்கள்தான் பா.ஜ.,வில் முதல்வர் ஆக்கப்பட்டுள்ளனர். யோகி ஆதித்யநாத் போன்ற நேர்மையான மற்றும் திறமையான தலைவர் உத்தர பிரதேசத்தை எப்படி வழிநடத்துகிறார் என்பதை டில்லி மக்கள் உணர வேண்டும். அதேபோல, டில்லியிலும் அர்ப்பணிப்பு உணர்வுமிக்க ஒருவர் முதல்வர் பதவியை ஏற்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.

