கணவர் போலவே பொய் பேசும் மனைவி சுனிதா கெஜ்ரிவால் மீது பா.ஜ., தாக்கு
கணவர் போலவே பொய் பேசும் மனைவி சுனிதா கெஜ்ரிவால் மீது பா.ஜ., தாக்கு
ADDED : ஜூலை 26, 2025 09:56 PM

புதுடில்லி:“பெண்களுக்கு மாதந்தோறும், 2,500 ரூபாய் வழங்குவதாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற டில்லி பா.ஜ., அரசு தாமதம் செய்கிறது,” என, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருன அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பேசினார்.
ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் அணி சார்பில், ஹரியாலி தீஜ் கொண்டாட்டம் நிஜாமுதீனில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்த, அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பேசியதாவது:
ஆம் ஆத்மி கட்சி ஒரு பெரிய குடும்பம் போன்றது. நமக்குள் இருக்கும் இந்த அன்பும் நல்லிணக்கமும் எப்போதும் நிலைத்திருக்கட்டும். சமூக மேம்பாட்டுக்காக நாம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற பொது ஆர்வத்தில் நாம் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளோம்.
பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்குவதாக சட்டசபையின் தேர்தலின் போது பா.ஜ., வாக்குறுதி அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை டில்லி பா.ஜ., அரசு மறந்து விட்டது.
மேலும், ஆம் ஆத்மி அரசு செயல்படுத்திய பெண்களுக்கு இலவச பஸ் பயணத்துக்கு பா.ஜ., அரசு நிபந்தனைகளை விதிக்கிறது. அதேபோல, ஏழைகளின் வீடுகளையும் இடித்துத் தள்ளி, அவர்களை நடுரோட்டுக்கு அனுப்பி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
டில்லி பா.ஜ., தலைவரும், முன்னாள் அமைச்சருமான சவுரவ் பரத்வாஜ், மகளிர் அணி தலைவி சரிகா சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுனிதாவின் இந்த விமர்சனம் குறித்து, டில்லி பா.ஜ., செய்தித் தொடர்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான ஷிகா ராய் கூறியதாவது:
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தீஜ் கொண்டாட்டத்தை துவக்கி வைக்க தன் மனைவியை அனுப்பி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ஆம் ஆத்மி கட்சி ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது என்பதை இது நிரூபித்து விட்டது.
கெஜ்ரிவால் நினைத்திருந்தால் முன்னாள் முதல்வர் ஆதிஷி சிங், முன்னாள் துணை சபாநாயகர் ராக்கி பிர்லா அல்லது முன்னாள் மேயர் டாக்டர் ஷெல்லி ஓபராய் போன்ற மூத்த பெண் தலைவர்களை அனுப்பி இருக்கலாம்.
தன் கணவரைப் போலவே, சுனிதாவும் பொய் மற்றும் தவறான தகவலைப் பரப்புகிறார். பெண்களுக்கான இலவச பஸ் பயணத்தில் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. சுனிதா கூறியது முற்றிலும் தவறு. டில்லியில் வசிக்கும் அனைத்து பெண்களும் அரசு பஸ்சில் இலவசமாகத்தான் பயணிக்கின்றனர். இந்த திட்டம் தொடரும்.
அதேபோல, பெண்களுக்கு மாதந்தோரும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அமைக்கப்பட்டுள்ள குழு, விதிமுறைகளை உருவாக்கி வருகிறது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.