பா.ஜ., பேரம் பேசிய குற்றச்சாட்டு: கெஜ்ரிவாலை தொடர்ந்து டில்லி அமைச்சருக்கு "நோட்டீஸ்"
பா.ஜ., பேரம் பேசிய குற்றச்சாட்டு: கெஜ்ரிவாலை தொடர்ந்து டில்லி அமைச்சருக்கு "நோட்டீஸ்"
ADDED : பிப் 04, 2024 12:59 PM

புதுடில்லி: பா.ஜ., மீது குற்றஞ்சாட்டிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அக்கட்சி புகார் அளித்த நிலையில், அவரிடம் போலீசார் நேற்று 'நோட்டீஸ்' அளித்தனர். இந்த குற்றச்சாட்டில், இன்று(பிப்.,04) ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.,வும், டில்லி கல்வி அமைச்சருமான அதிஷிக்கு குற்றப்பிரிவுத் துறை போலீசார் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. இங்கு, தன் அரசை கவிழ்க்க, பா.ஜ., சதி செய்வதாகவும், கட்சியில் இருந்து விலகினால், 25 கோடி ரூபாய் தருவதாக, தங்கள் கட்சியைச் சேர்ந்த ஏழு எம்.எல்.ஏ.,க்களிடம், பா.ஜ., பேரம் பேசியதாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். இதற்கு, டில்லி பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இதுதொடர்பாக பொய் புகாரை எழுப்பிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக டில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் ஐந்து மணி நேர காத்திருப்புக்கு பின் போலீசார், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் போலீசார் விசாரணை நோட்டீஸ் அளித்தனர். இதில், பா.ஜ., அளித்த புகாருக்கு மூன்று நாட்களுக்குள் உரிய பதிலை எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த குற்றச்சாட்டில், இன்று(பிப்.,04) ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.,வும், டில்லி கல்வி அமைச்சருமான அதிஷியின் வீட்டுக்குச் சென்ற குற்றப்பிரிவுத் துறை போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஆட்சியை கவிழ்க்க, பா.ஜ., சதி செய்து வருவதால், ஆம் ஆத்மியினரை குறி வைத்து வருகின்றனர் என கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.