பா.ஜ., வேட்பாளர் பட்டியல்!: 195 பெயர்களை அறிவித்து அதிரடி: மோடிக்கு மீண்டும் வாரணாசி
பா.ஜ., வேட்பாளர் பட்டியல்!: 195 பெயர்களை அறிவித்து அதிரடி: மோடிக்கு மீண்டும் வாரணாசி
UPDATED : மார் 04, 2024 01:14 AM
ADDED : மார் 03, 2024 12:26 AM

தேர்தல் அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில், 195 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை நேற்று அதிரடியாக வெளியிட்டு, இன்னும் கூட்டணியே முடிவு செய்யாமல் திணறிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது பாரதிய ஜனதா கட்சி.
பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உட்பட 34 அமைச்சர்களின் பெயர்களும் முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இரண்டு முன்னாள் முதல்வர்களும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பட்டியலில் உள்ள 47 பேர், 50 வயதுக்கும் குறைவானவர்கள். 28 பேர் பெண்கள். எஸ்.சி., வகுப்பை சேர்ந்தவர்கள் 27 பேர், எஸ்.டி., பிரிவினர் 18 பேர், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 57 பேர். மூன்றில் ஒரு பங்கு தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என பேசப்பட்ட நிலையில், 195 பேர் கொண்ட பட்டியலில், 28 பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இது 15 சதவீதம் கூட இல்லை. அடுத்து வரும் பட்டியல்களில், பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்படும் என மகளிர் அணியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த லேக்சபா தேர்தலில், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான 11 நாட்களுக்கு பிறகுதான், 180 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை பா.ஜ., வெளியிட்டது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக அக்கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது இதுவே முதல் முறை.
உறுதியான தலைமை கொண்ட கட்டுப்பாடான கட்சி என்ற தோற்றத்துக்கு வலுவூட்டவும், அதற்கு நேர் மாறாக எதிர்க்கட்சிகள் எந்த அளவுக்கு திணறிக் கொண்டிருக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டு காட்டவும் பாரதிய ஜனதா இவ்வளவு முன்னதாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. பட்டியல் அறிவிப்புக்கு முன்னரே தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி துவக்கி விட்டார்; நான்கைந்து மாநிலங்களில் பிரசார கூட்டங்களில் பேசியும் இருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு தயாராவதற்குள் பொதுக்கூட்ட பிரசாரத்தை எல்லாம் முடித்து விட்டு, வீடு வீடாக ஓட்டு சேகரிக்கும் கட்டத்துக்கு பாரதிய ஜனதா நகர்ந்துவிடும் என்று தெரிகிறது. கட்சி 370 தொகுதிகளை கைப்பற்றுவது, கூட்டணியின் மற்ற கட்சிகள் உதவியுடன் 400 என்ற இலக்கை எட்டுவது. இதுதான் கட்சி நிர்வாகிகளுக்கு மோடி வகுத்தளித்துள்ள திட்டம். அதை நிறைவேற்றுவதில் அவருக்கு இருக்கும் அக்கறைக்கு சாட்சி இந்த வேட்பாளர் பட்டியல். விடிய விடிய நடந்த கூட்டத்தில் விவாதித்து 195 பெயர்களும் முடிவு செய்யப்பட்டன. கட்சியின் தேசிய தலைவர் நட்டா, மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் அனைத்து பா.ஜ., முதல்வர்கள், மூத்த நிர்வாகிகள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.


இளைஞர் படை
அறிவிக்கப்பட்ட 195 வேட்பாளர்களில், 50 வயதை எட்டாதவர்கள் 47 பேர் உள்ளனர்.
மாநில வாரியாக வேட்பாளர் எண்ணிக்கை


எந்த பிரிவுக்கு எத்தனை சீட்?

சவுகானுக்கு ஆறுதல் பரிசு

நட்சத்திர வேட்பாளர்கள்
பா.ஜ., மூத்தத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சுரி சுவராஜுக்கு, புதுடில்லி லோக்சபா தொகுதியில் போட்டியிட பா.ஜ., தலைமை வாய்ப்பு அளித்துள்ளது. மலையாள திரைப்பட நடிகர் சுரேஷ் கோபிக்கு, கேரளாவின் திருச்சூர் லோக்சபா தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகனும், பா.ஜ.,வின் தேசிய செயலராகவும் உள்ள அனில் அந்தோணி கேரளாவின் பத்தனம்திட்டா லோக்சபா தொகுதியில் களமிறங்க உள்ளார். ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் மனைவி கீதா கோடா, சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். தற்போது சிங்பூம் லோக்சபா தொகுதி உறுப்பினராக உள்ள நிலையில், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட பா.ஜ., அவருக்கு வாய்ப்பு அளித்துள்ளது. லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜஸ்தானின் கோடா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
- நமது சிறப்பு நிருபர் -

