கெஜ்ரிவால் மீது ரூ.100 கோடி அவதூறு வழக்கு பா.ஜ., வேட்பாளர் வர்மா அறிவிப்பு
கெஜ்ரிவால் மீது ரூ.100 கோடி அவதூறு வழக்கு பா.ஜ., வேட்பாளர் வர்மா அறிவிப்பு
ADDED : ஜன 22, 2025 08:34 PM
புதுடில்லி:“டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மீது, 100 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடருவேன். வழக்கில் வெற்றி பெற்றால், அந்தப் பணத்தை தொகுதி வளர்ச்சிப் பணிக்கு வழங்குவேன்ம்”என, புதுடில்லி தொகுதி பா.ஜ., வேட்பாளர் பர்வேஷ் வர்மா கூறினார்.
இதுகுறித்து பர்வேஷ் வர்மா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
பஞ்சாபியர் நாட்டுக்கே அச்சுறுத்தல் என நான் கூறியதாக அரவிந்த் கெஜ்ரிவால் தவறான தகவலை பரப்பியுள்ளார். நானும் என் குடும்பத்தினரும் சீக்கிய சமூகத்துக்காக என்ன செய்தோம் என்பதை சொல்லவே தேவையில்லை. அது பஞ்சாபியருக்கே நன்றாக தெரியும்.
டில்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரசாரம் செய்ய, பஞ்சாபிலிருந்து ஆயிரக்கணக்கான கார்கள், ஆம் ஆத்மி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் டில்லியில் முகாமிட்டுள்ளனர்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும், டில்லியில் தான் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.
அவர்கள் பிரசாரம் செய்வதால் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள், மதுபானங்கள் மற்றும் பணம் ஆகியவற்றை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். இதுகுறித்து, போலீஸ் மற்றும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன். கெஜ்ரிவால் தன் தோல்வியை உணர்ந்து விட்டதால், அந்த விரக்தியில் பொய்களை அவிழ்த்து விடுகிறார். ராமர் மற்றும் ஹனுமன் குறித்த கருத்துக்கள் மூலம் கெஜ்ரிவால் ஹிந்துக்களின் உணர்வுகளை அவமதித்து விட்டார்.
இதற்கு டில்லி மக்கள் பிப்ரவரி 5ம் தேதி தங்கள் ஓட்டு வாயிலாக பதிலளிப்பர். டில்லியில் பிப்ரவரி 8ம் தேதி தாமரை மலரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
“பஞ்சாபிலிருந்து வரும் கார்கள், தலைநகர் டில்லியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது,” என, பர்வேஷ் வர்மா ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதில் அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
லட்சக்கணக்கான பஞ்சாபியரின் தாயகமாக டில்லி விளங்குகிறது. ஏராளமான பஞ்சாபியர் நம் நாட்டுக்காக தியாகம் செய்துள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, ஏராளமான பஞ்சாபியர் அகதிகளாக டில்லிக்கு வந்தனர். தங்கள் சொத்துக்களை இழந்த நிலையில், பெரும் துன்பங்களைச் சகித்தனர். பஞ்சாபியர்தான் தலைநகர் டில்லியை வடிவமைத்தனர். அந்த பஞ்சாபியரை நாட்டுக்கு அச்சுறுத்தல் என பர்வேஷ் வர்மா கூறியதன் மூலம், டில்லியில் வசிக்கும் லட்சக்கணக்கான பஞ்சாபியரை பா.ஜ., அவமதித்துள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கிறது. பஞ்சாபியரிடம் பா.ஜ., மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

