UPDATED : பிப் 08, 2025 05:21 PM
ADDED : பிப் 08, 2025 09:08 AM

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்துள்ளதன் மூலம், தேசிய தலைநகரில் ஆதிக்கம் செலுத்தி வந்த அரவிந்த் கெஜ்ரிவால் சாம்ராஜ்யம் சரிந்துள்ளது.
டில்லி ஆம் ஆத்மி கோட்டையாக விளங்கி வந்தது. கடந்த 2015ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதியில் 67 தொகுதிகளை கைப்பற்றி ஆம்ஆத்மி ஆட்சியை பிடித்தது. பின்னர் 2020ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற, கெஜ்ரிவால் இரண்டாவது முறையாக முதல்வர் ஆனார்.
அதைத் தொடர்ந்து அவரது கட்சிக்கு பஞ்சாப் சட்டசபை தேர்தலிலும் வெற்றி கிடைத்தது. குஜராத் மாநிலத்திலும், அவரது கட்சிக்கு கணிசமான சதவீதத்தில் ஓட்டுகள் கிடைத்தன.இதனால் அவரது கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்தும் கிடைத்தது. இப்படி அடுத்தடுத்து மேலே மேலே உச்சம் நோக்கி சென்று கொண்டிருந்த கெஜ்ரிவால் மீது எழுந்த ஊழல் புகார்கள், அவரது அரசியலுக்கு தடையாக அமைந்தன.
மதுபான ஊழல் வழக்கில், கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது அமைச்சர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். ஊழல் வழக்குகளில் சிக்கி சோதனைக்கு ஆளாகினர்.
சிறையில் இருந்து ஜாமினில் விடுதலை ஆகவே கெஜ்ரிவால் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அப்படி வெளியில் வந்தவர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, அதிஷியை முதல்வர் ஆக்கினார். சிறையிலிருந்து விடுதலையான பிறகும், கெஜ்ரிவால் 'மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும். மக்கள் எனக்கு வாய்ப்பு தருவார்கள்' என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி தேர்தல் பிரசாரத்திலும், டில்லி மக்கள் ஆம் ஆத்மி மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக கூறியிருந்தார்.
தற்போது தேர்தல் முடிவுகள் தலைகீழாக உள்ளன. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, பா.ஜ., கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர். இதனால் தேசிய தலைநகரில் 10 ஆண்டுக்கும் மேலாக அசைக்க முடியாத செல்வாக்குடன் ஆதிக்கம் செலுத்தி வந்த கெஜ்ரிவால் சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டுள்ளது; இதன் பாதிப்பு பஞ்சாபிலும் எதிரொலிக்கும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.