ஏழைகளின் நலனில் அக்கறை செலுத்தும் பா.ஜ.,: பீஹாரில் பிரதமர் மோடி பேச்சு
ஏழைகளின் நலனில் அக்கறை செலுத்தும் பா.ஜ.,: பீஹாரில் பிரதமர் மோடி பேச்சு
ADDED : மார் 02, 2024 04:42 PM

பாட்னா: 'பீஹார் மாநிலத்தில் ஏழைகள், தலித், ஆதிவாசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனில் எங்கள் அரசு அக்கறை செலுத்துகிறது' என பிரதமர் மோடி கூறினார்.
பீஹார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி ரூ.21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி வலுப் பெற்றுள்ளதால், பீஹாரில் வம்ச அரசியல் ஓரங்கட்டப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பீஹார் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்தனர், இன்றைய காலக்கட்டத்தில் பீஹாருக்கு சுற்றுலா பயணிகள் வருகை தரும் வகையில் மாறியுள்ளது.
சமீபத்தில் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. இது ஒட்டுமொத்த பீஹார் மாநிலத்திற்கே கிடைத்த கவுரவம். பீஹார் மாநிலத்தில் ஏழைகள், தலித், ஆதிவாசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனில் எங்கள் அரசு அக்கறை செலுத்துகிறது. ஏழைகள் முன்னேறும் போது தான், மாநிலம் வளர்ச்சி அடையும்.
இன்று பீஹாரில் ரூ.21,500 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்கள் துவங்கி வைக்கப்பட்டன. பீஹாரில் இருந்து வேலைக்காக வெளி மாநிலங்களுக்கு மக்கள் செல்லும் நிலை இருந்தது. அந்த நிலை மாறி உள்ளது. அது மீண்டும் வந்து விடக்கூடாது.
வம்ச அரசியலில் ஈடுபட்டு வருபவர்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்று பார்லிமென்ட் வர முயற்சிக்கின்றனர். பீஹார் சீதா தேவியின் தேசம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டபோது இங்கு உற்சாகம் காணப்பட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

