ADDED : மார் 08, 2024 02:03 AM
விஜயபுரா: விஜயபுரா மாநகராட்சி அலுவலக வளாகத்தில், விநாயகர் சிலை நிறுவுவதில் தாமதம் செய்வதாக, காங்கிரஸ் மேயர் மீது பா.ஜ., கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
விஜயபுரா மாநகராட்சி மேயராக காங்கிரசின் மெஹ்ஜபீன் ஹொர்டி உள்ளார். கடந்த மாதம் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மாநகராட்சி அலுவலகம் முன் விநாயகர் சிலை நிறுவுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கட்சி பாகுபாடின்றி கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். புதிய விநாயகர் சிலையும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் சிலை இன்னும் நிறுவப்படவில்லை. இதற்கு மேயர் மெஹ்ஜபீன் ஹொர்டியும், கமிஷனர் பதுரூதீன் தான் காரணம் என்று, பா.ஜ., கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ராமர் கோவில் திறப்பு விழாவில் நடந்து கொண்டது போன்று, விநாயகர் சிலை வைப்பதிலும், காங்கிரஸ் அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'சிலையை உடனடியாக நிறுவ வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம்' என, பா.ஜ., கவுன்சிலர்கள் எச்சரித்து உள்ளனர்.

