ADDED : மார் 21, 2024 01:22 AM
புதுடில்லி, ஹிந்து மதம் மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காங்., - எம்.பி., ராகுல் மீது நடவடிக்கை கோரி, தேர்தல் கமிஷனில், பா.ஜ., புகார் அளித்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையில், சமீபத்தில் நடந்த பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின் நிறைவு விழாவில் பேசிய காங்., முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல், 'ஹிந்து மதத்தில், 'சக்தி' என்ற வார்த்தை உள்ளது.
'அதை எதிர்த்து தான் நாம் போராடப் போகிறோம். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், மன்னரின் ஆன்மா உள்ளது. இது உண்மை' என, பேசினார்.
இதற்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி, 'நாட்டில் உள்ள ஒவ்வொரு தாயும், மகளும், சகோதரியும், 'சக்தி'யின் உருவமாக திகழ்கின்றனர். அவர்களை பாதுகாக்க என் உயிரை தியாகம் செய்ய தயார்' என கூறினார்.
இந்நிலையில் நேற்று, ஹிந்து மதம் மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ராகுல் மீது நடவடிக்கை கோரி, டில்லியில் உள்ள தேர்தல் கமிஷனில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி புகார் அளித்தார்.

