டில்லி அரசு முடங்கியதாக பா.ஜ., புகார்; தேர்தலுக்கு தயார் என்கிறது ஆம் ஆத்மி
டில்லி அரசு முடங்கியதாக பா.ஜ., புகார்; தேர்தலுக்கு தயார் என்கிறது ஆம் ஆத்மி
ADDED : செப் 10, 2024 05:42 PM

புதுடில்லி: டில்லி அரசை கலைக்க வேண்டும் எனக்கூறி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அனுப்பிய கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஜனாதிபதி அனுப்பினார். 'நாளையே தேர்தல் அறிவித்தாலும் நாங்கள் தயார்' என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முதல்வர் கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைத்தாலும், சி.பி.ஐ., வழக்கில் இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை.
இந்நிலையில், 'கெஜ்ரிவால் சிறையில் உள்ளதால் நிர்வாக பணிகளில் தாமதம் ஏற்படுவதுடன், மாநிலத்தில் அரசியல் சாசன பிரச்னை எழுந்துள்ளது. எனவே டில்லி அரசை கலைக்க வேண்டும்' என பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதினர்.
இதனை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
டில்லி அமைச்சர் அதிஷி கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் தோல்வி ஏற்படும் என்பதை, பா.ஜ., ஏற்கனவே ஒப்புக் கொண்டு உள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கலைப்பதையே அக்கட்சி நோக்கமாக கொண்டு உள்ளது. தற்போது புதிய சதியில் ஈடுபட்டுள்ள அந்த கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆம்ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் கூறியதாவது: டில்லியில் பா.ஜ., விரைவாக தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என நினைக்கிறது. அக்கட்சி நாளையே வேண்டுமானால் தேர்தல் தேதியை அறிவிக்கட்டும். நாங்கள் தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்த பா.ஜ., மாநில தலைவர் விஜேந்தர் குப்தா கூறியதாவது: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் இருந்து விலக மறுக்கிறார். இதனால், டில்லி அரசு முடங்கியதுடன் முன் எப்போதும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த 4 மாதங்கள் பற்றி மட்டும் நாங்கள் புகார் அளிக்கவில்லை. கடந்த 10 ஆண்டு பற்றியும் புகார் தெரிவித்துள்ளோம். அக்காலகட்டத்தில் அரசின் செயல்பாடு குறித்து தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

