ஐஜுரு எஸ்.ஐ., தன்வீர் உசேனை கண்டித்து சட்டசபையில் பா.ஜ., - ம.ஜ.த., தர்ணா
ஐஜுரு எஸ்.ஐ., தன்வீர் உசேனை கண்டித்து சட்டசபையில் பா.ஜ., - ம.ஜ.த., தர்ணா
ADDED : பிப் 21, 2024 06:54 AM

பெங்களூரு : வக்கீல்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்த ஐஜுரு போலீஸ் நிலைய எஸ்.ஐ., தன்வீர் உசேனை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் சட்டசபையில் நேற்று தர்ணா செய்தனர்.
ராம்நகர் ஐஜுரு போலீஸ் நிலைய எஸ்.ஐ., தன்வீர் உசேன், 40 வக்கீல்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை வலியுறுத்தியும், நேற்று முதல், கலெக்டர் அலுவலகம் முன் வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தகவலறிந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறி வந்தனர்.
இது குறித்து, சட்டசபை பூஜ்ய வேளையில் நேற்று நடந்த விவாதம்:
எதிர்க்கட்சித் தலைவர்: ராம்நகரில் அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது. நானும், குமாரசாமியும் நேரில் சென்றோம். சாந்த் பாஷா என்ற வக்கீல், ஞானவேபி மசூதியில், பூஜை செய்ய அனுமதி அளித்த நீதிபதி குறித்து தவறாக 'எக்ஸ்' வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஹிந்துக்கள், பா.ஜ.,வினர் குறித்தும் தவறாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அப்பகுதியினர் போலீஸ் நிலையத்திலும், வக்கீல்கள் சங்கத்துக்கும் புகார் செய்துள்ளனர். வக்கீல்கள் ஆலோசனை நடத்தி கொண்டிருந்தபோது, சிலர் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டு, கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளனர்.
சம்பவம் குறித்து, போலீசில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் பின், சாந்த் பாஷா தரப்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் மீது மட்டும், 40 வக்கீல்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர்: சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு, சென்னப்பட்டணா டி.எஸ்.பி.,யை அரசு நியமனம் செய்துள்ளது. விசாரணை அறிக்கையில், தவறு இருந்தால், எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு அதிகாரியை தேவையின்றி, பணியிடை நீக்கம் செய்ய முடியாது.
எதிர்க்கட்சித் தலைவர்: எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
பா.ஜ., - பசனகவுடா பாட்டீல் எத்னால்: வக்கீல்களுக்கு நீதி கொடுங்கள்; எஸ்.ஐ.,யை எல்லையை விட்டு வெளியேற்றுங்கள். இந்த நிலை நீடித்தால், ஹிந்துக்கள் மீது கொடுமைகள் நீடிக்கும்.
பா.ஜ., - அஸ்வத் நாராயணா: சபாநாயகரே, உங்களுக்கும் பி.எப்.ஐ., அமைப்பினர் எவ்வளவு தொந்தரவு கொடுத்தனர் என்று தெரியும்.
இதன்பின், எஸ்.ஐ.,யை உடனடியாக பணியிடை நீக்கம் செய்தாக வேண்டும், பா.ஜ., - ம.ஜ.த., உறுப்பினர்கள், சபாநாயகர் இருக்கை முன் தர்ணாவில் ஈடுபட்டனர். கடும் வாக்குவாதம் நடந்தது. கூச்சல், குழப்பம் நிலவியது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

