வங்கதேசத்தினருக்கு ஆதரவாக பேசுவதா? சமூக ஆர்வலர் சையதாவுக்கு பா.ஜ., கண்டனம்
வங்கதேசத்தினருக்கு ஆதரவாக பேசுவதா? சமூக ஆர்வலர் சையதாவுக்கு பா.ஜ., கண்டனம்
ADDED : ஆக 25, 2025 11:48 PM

புதுடில்லி: 'வங்கதேசத்தினரும் மனிதர்கள் தான்; அவர்கள் இந்தியாவில் வாழும் உரிமையை யாரும் தடுக்க முடியாது' என, பேசிய சமூக ஆர்வலரும், சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு நெருக்கமானவருமான சையதா ஹமீதுக்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில், நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியுள்ளவர்களை வெளியேற்றும் பணியை, மாநில அரசு மேற் கொண்டுள்ளது.
எதிர்ப்பு பா.ஜ., முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் உத்தரவுபடி, இந்த வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
இங்குள்ள ஸ்ரீபூமி பகுதியில் இருந்து 10 பேர், இம்மாத துவக்கத்தில் வங்கதேசத்துக்கு நாடு கடத்தப்பட்டனர்.
அதேசமயம், அரசு மற்றும் வனத் துறைக்கு சொந்தமான நிலங்களிலும், மேய்ச்சல் நிலங்களிலும் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கண்டறிந்து வெளியேற்றும் பணியும் அசாமில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலரான சையதா ஹமீத் எதிர்ப்பு தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் திட்டக்குழு உறுப்பினராக இருந்த சையதா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு நெருக்கமானவர்.
அசாமில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சையதா ஹமீத், மாநில அரசின் நடவடிக்கையை சாடினார்.
அப்போது பேசிய அவர், 'வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் என்ன தவறு? அவர்களும் மனிதர்கள் தான். இந்த பூமி மிகப்பெரியது. வங்கதேசத்தினர் இங்கு வாழலாம்.
'அவர்களின் உரிமையை யாரும் தடுக்க முடியாது. தேசியத்தின் அடிப்படையில் மனிதர்களை வெளியேற்றுவது அநீதியானது; மனிதநேயத்துக்கு எதிரானது' என, கூறியிருந்தார்.
இதற்கு பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று அவர் கூறுகையில், “வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் சிறுபான்மையினரான பவுத்தர்கள், கிறிஸ்துவர்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள் ஏன் துன்புறுத்தப்படுகின்றனர்? இது, நம் நிலம் மற்றும் அடை யாளத்தை பற்றியது.
''இந்த விவகாரத்தில், மனிதநேயத்தின் பெயரால் சையதா தவறாக வழி நடத்துகிறார். அவர், சோனியா, ராகுலுக்கு நெருக்கமாக இருக்கலாம். ஆனால், சட்டவிரோத குடியேறிகளை ஆதரிக்கக் கூடாது,” என, தெரிவித்துள்ளார்.
சையதா ஹமீத் கருத்துக்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போராடுவோம்
அவர் வெளியிட்ட அறிக்கை:
சோனியா - ராகுல் குடும்பத்தினருக்கு நெருக்கமானவரான சையதா ஹமீத் போன்றோர், அசாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்ற ஜின்னாவின் கனவை நனவாக்க முயற்சிக்கின்றனர். சட்டவிரோத ஊடுருவல்காரர்களை அவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.
இது போன்ற மறைமுக ஆதரவு காரணமாக, அசாமின் அடையாளம் அழிவின் விளிம்பில் உள்ளது. அசாம், வங்கதேசத்தினரின் நிலம் அல்ல; இது எங்களுடையது.
எங்கள் மாநிலத்தையும், அதன் அடையாளத்தையும் காப்பாற்ற கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை நாங்கள் போராடுவோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.