பா.ஜ., ஒருங்கிணைப்பு கமிட்டி: முன்னாள் முதல்வர் அதிருப்தி
பா.ஜ., ஒருங்கிணைப்பு கமிட்டி: முன்னாள் முதல்வர் அதிருப்தி
ADDED : ஜன 28, 2025 06:26 AM

பெங்களூரு : ''கர்நாடகா பா.ஜ.,வில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு, ஒருங்கிணைப்பு கமிட்டி சரியாக பணியாற்றாததே காரணம்,'' என, முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடகா பா.ஜ.,வில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு, ஒருங்கிணைப்பு கமிட்டி சரியாக பணியாற்றாததே காரணம். முக்கிய முடிவு எடுக்க வேண்டியதற்காக அமைக்கப்பட்ட இக்கமிட்டியை சரியாக பயன்படுத்தவில்லை.
கட்சிக்குள் குழப்பம் ஏற்படும்போது, மத்திய தலைவர்கள் தலையிட்டு, பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவர். ஆனால் அது நடக்கவில்லை. பல நாட்களுக்கு பின், கடந்த வாரம் ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
கட்சித் தொண்டர்களை சந்தித்து அவர்களின் ஆலோசனையை கேட்கவில்லை. அத்துடன், அதிருப்தியில் உள்ள தலைவர்களை சமாதானப்படுத்துவதில் விஜயேந்திரா தோற்றுவிட்டார்.
கட்சி உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்காக தான், பலரும் கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனரே தவிர, கர்நாடகா பா.ஜ.,வுக்காக அல்ல.
பொதுச் செயலர் பதவியில் இருந்து விலகும் சுனில் குமார்; பிரீதம் கவுடா பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். புதிய மாநிலத் தலைவர் தேர்தல் நேர்மையான முறையில் நடக்கும். அப்போது தான் கட்சிக்கு பலம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

