கர்நாடகாவில் மின் கட்டணம் குறைப்பு தேர்தல் தந்திரம் என பா.ஜ., விமர்சனம்
கர்நாடகாவில் மின் கட்டணம் குறைப்பு தேர்தல் தந்திரம் என பா.ஜ., விமர்சனம்
ADDED : மார் 02, 2024 04:06 AM
பெங்களூரு, : 'லோக்சபா தேர்தலில், ஓட்டுகளை பெறும் நோக்கில், மின் கட்டணத்தை காங்கிரஸ் குறைத்துள்ளது. இது தேர்தல் தந்திரம்' என, பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைந்ததில், ஐந்து வாக்குறுதித் திட்டங்கள் முக்கிய பங்கு வகித்தது. இதே விஷயத்தை காங்கிரஸ், லோக்சபா தேர்தல் பிரசார அஸ்திரமாக பயன்படுத்துகிறது. மக்களுக்கு மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும், 'கிரஹ ஜோதி' திட்டதை செயல்படுத்திய அரசு, தற்போது மின் கட்டணத்தை குறைத்துள்ளது.
வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், தொழிற்சாலைகளின் மின் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 1.10 ரூபாய், வர்த்தக பயன்பாடு மின்சாரம் யூனிட்டுக்கு 1.25 ரூபாய், தொழிற்சாலைகள் பயன்பாடு மின்சாரத்துக்கு, யூனிட்டுக்கு 50 பைசா,
தனியார் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு 40 பைசா கட்டணம் குறைத்து, கர்நாடக மின் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த கட்டண குறைப்பு சலுகை, ஏப்ரல் 1ல் அமலுக்கு வரும்.
'எக்ஸ்' சமூக வலைதளத்தில், 'லோக்சபா தேர்தல் அட்டவணை எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம். இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் அரசு அவசர, அவசரமாக மின் கட்டணத்தை குறைத்து, மக்களை ஈர்க்க முயற்சிக்கிறது. இது தேர்தல் தந்திரம்' என, பா.ஜ., கூறியுள்ளது.

