ADDED : அக் 19, 2024 08:02 PM
புதுடில்லி:சி.ஏ.ஜி., எனப்படும் தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கையை, சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய வலியுறுத்தி, முதல்வர் ஆதிஷி சிங்கின் மதுரா சாலை பங்களா அருகே பா.ஜ., நேற்று போராட்டம் நடத்தியது.
பா.ஜ., மூத்த தலைவரும், டில்லி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா தலைமையில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
குப்தா பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான டில்லி அரசின் கணக்கு வழக்கு குறித்து மத்திய அரசின் தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கையை சட்டசபையில் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யவில்லை. மாநில அரசின் நிதி தணிக்கை, வாகன காற்று மாசுபாடு தடுப்பு, பொது சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள், மதுபானங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வழங்குதல், அத்துடன் நிதி கணக்குகள் மற்றும் ஒதுக்கீட்டு கணக்குகள் உட்பட பல்வேறு தலைப்புகளை ஆய்வு செய்து தலைமை கணக்கு அதிகாரி அறிக்கை கொடுத்துள்ளார்.
நிலுவையில் உள்ள தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கைகளை சட்டசபையில் தாக்கல் செய்யுமாறு, டில்லி அரசின் தலைமைச் செயலர் தர்மேந்திரா மற்றும் நிதித்துறை செயலர் ஆஷிஷ் சந்திர வர்மா ஆகியோருக்கு துணைநிலை கவர்னர் சக்சேனா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2020- - 2021ம் நிதியாண்டு வரை 12 அறிக்கைகள் இன்னும் தாக்கல் செய்யப்படாமல் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.