ஆட்சியில் நீடிக்கும் அருகதை இல்லை சட்ட மேலவையில் பா.ஜ., தர்ணா
ஆட்சியில் நீடிக்கும் அருகதை இல்லை சட்ட மேலவையில் பா.ஜ., தர்ணா
ADDED : மார் 01, 2024 06:27 AM
பெங்களூரு: பட்ஜெட் விவாதத்தின்போது, எதிர்க்கட்சியான பா.ஜ., தர்ணா நடத்தியதால், சட்டமேலவையில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை உருவானது.
கர்நாடக சட்டமேலவையில், நேற்று பட்ஜெட் தொடர்பாக நடந்த விவாதம்:
பா.ஜ., - கோட்டா சீனிவாச பூஜாரி: விதான்சவுதா வளாகத்தில், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என, கோஷமிட்டவர்களை கைது செய்யவில்லை. இந்த அரசுக்கு, ஆட்சியில் நீடிக்கும் அருகதை இல்லை.
அமைச்சர் போசராஜ்: இது பற்றி ஏற்கனவே விரிவாக விவாதம் நடந்துள்ளது. சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் சிறப்பாக பதில் அளித்துள்ளார்.
காங்கிரஸ் கொறடா சலீம்: எதிர்க்கட்சியினருக்கு விவாதிக்க எந்த விஷயங்களும் இல்லை. ஒரே விஷயத்தை அவ்வப்போது பேசி, அவையின் நேரத்தை பாழாக்குகின்றனர்.
சட்டமேலவை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவையின் விதிமுறையை பின்பற்றாமல், அவை தலைவரின் பீடத்துக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர்.
பாஜ., தலைமை கொறடா ரவிகுமார்: சம்பவம் நடந்து 36 மணி நேரம் கடந்தும், குற்றவாளியை கைது செய்யவில்லை. அவர்களை காப்பாற்ற முயற்சிக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இது குறித்து, முதல்வர், உள்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.
சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி: ஏற்கனவே விவாதம் முடிந்துள்ளது. அரசு பதில் அளித்துள்ளது. இந்த விஷயம் பற்றி விவாதிக்க, வாய்ப்பளிக்க மாட்டேன்.
பா.ஜ., உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்து, அவைத் தலைவர் இருக்கைக்கு முன் சென்று, தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

