எத்னால் உள்ளிட்ட பா.ஜ., அதிருப்தி தலைவர்கள் டில்லியில் முகாம்! விஜயேந்திரா பதவியை பறிக்க மேலிடத்தில் 'அடம்'
எத்னால் உள்ளிட்ட பா.ஜ., அதிருப்தி தலைவர்கள் டில்லியில் முகாம்! விஜயேந்திரா பதவியை பறிக்க மேலிடத்தில் 'அடம்'
ADDED : பிப் 05, 2025 06:44 AM

கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா. இவரது தலைமையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், காங்கிரசுடன் உள் ஒப்பந்த அரசியல் செய்வதாகவும் விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசன கவுடா பாட்டீல் எத்னால் முதலில் போர்க்கொடி துாக்கினார்.
அவரது தலைமையில் அமைந்த அதிருப்தி அணியில், கோகாக் பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி, முன்னாள் அமைச்சர்கள் மது பங்காரப்பா, அரவிந்த் லிம்பாவளி, முன்னாள் எம்.பி.,க்கள் சித்தேஸ்வர், பிரதாப் சிம்ஹா உள்ளிட்ட தலைவர்கள் அடுத்தடுத்து அணிவகுத்தனர்.
விஜயேந்திராவுக்கு எதிராக, தினமும் ஊடகங்கள் முன் பேச ஆரம்பித்தனர். 'தலைவர் பதவியில் இருந்து விஜயேந்திராவை மாற்றும் வரை நாங்கள் ஓய மாட்டோம்' என்றும் சபதம் எடுத்து கொண்டனர்.
இந்நிலையில், கடந்த மாதம் கர்நாடகா வந்த பா.ஜ., மேலிட பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வால், 'மாநில தலைவர் மாற்றப்பட மாட்டார்' என்று கூறியதால், அதிருப்தி அணி கோபம் அடைந்தது.
சந்திப்பு
இதற்கிடையில், கர்நாடக பா.ஜ., மேலிட பார்வையாளரும், மத்திய அமைச்சருமான சிவராஜ்சிங் சவுகான், 'கர்நாடக பா.ஜ., தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும்' என்று அறிவித்தார். இதனால், எத்னால் அணி சுறுசுறுப்பானது. அதிருப்தி அணியில் இருந்து ஒருவரை தலைவர் பதவிக்கு நிறுத்தவும் திட்டமிட்டனர்.
தலைவர் பதவிக்கு நிற்க தயார் என்று எத்னாலே அறிவித்தார். ஆனால், தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தும் முடிவை கைவிட்டு, விஜயேந்திராவை தலைவராக தொடர வைக்க, மேலிடம் யோசித்து வருவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, நேற்று முன்தினம், எத்னால் உள்ளிட்ட அதிருப்தி அணியினர் டில்லிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு கர்நாடக பவன் மற்றும் ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினமே கட்சியின் தேசிய அமைப்பு செயலர் சந்தோஷை, எத்னால் அணியின் குமார் பங்காரப்பா சந்தித்து பேசினார்.
நேற்று 2வது நாளாக சந்தோஷை மீண்டும் குமார் பங்காரப்பா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ரமேஷ் ஜார்கிஹோளியும் உடன் இருந்தார்.
கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தல், கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் விஜயேந்திரா, காங்கிரசுடன் உள் ஒப்பந்தம் செய்து என்னென்ன செய்தார். பா.ஜ., வேட்பாளர்கள் யாரை எல்லாம் தோற்கடித்தார் என்று, விபரமாக எடுத்து கூறி உள்ளனர்.
உள் ஒப்பந்தம்
மேலும், 'கட்சியின் மூத்த தலைவர்கள் யாரையும் மதிப்பது இல்லை. தனக்கு யார் தேவையோ, அவர்களுக்கு கட்சியில் பதவி கொடுக்கிறார். தலைவர் பதவியில் இருந்து விஜயேந்திராவை நீக்கா விட்டால், மாநிலத்தில் கட்சி அழிந்து விடும். கட்சியை அழிவு பாதைக்கு தள்ளிவிட்டார். தயவு செய்து அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, கட்சியை காப்பாற்றுங்கள்' என்று கூறி உள்ளனர்.
இன்னொரு குழுவினர், கட்சியின் தேசிய தலைவர் நட்டா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து, விஜயேந்திரா மீது புகார் மடல் வாசிக்க தயாராகி வருகின்றனர். விஜயேந்திரா விவகாரத்தில் ஒரு முடிவு தெரியும் வரை, டில்லியில் இருந்து நகர கூடாது என்று அடம் பிடித்து, அங்கேயே முகாமிட்டுள்ளனர்.
சந்தோஷ் உடனான சந்திப்புக்கு பின் ரமேஷ் ஜார்கிஹோளி கூறுகையில், ''கட்சிக்கு எதிராக விஜயேந்திரா எப்படி எல்லாம் செயல்படுகிறார் என்று எடுத்து கூறி உள்ளோம். அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்காமல் விட மாட்டோம்,'' என்றார்.
எத்னால் கூறுகையில், ''டில்லிக்கு அடிக்கடி செல்வதற்கு, எங்களுக்கு வேலை இல்லாமல் இல்லை. எங்கள் நோக்கம் கட்சியை பாதுகாப்பது. அது விஜயேந்திரா இருக்கும் வரை கண்டிப்பாக நடக்காது. கட்சியை காப்பாற்ற அவரை நீக்குவது அவசியம்,'' என்றார்.
சொந்த வேலையாக, எத்னால் மட்டும் நேற்று கர்நாடகா திரும்பினார். இன்று, அவர் மீண்டும் டில்லி செல்ல வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை டில்லியில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவையும், அதிருப்தி அணியினர் சந்தித்து பேசினர்.
பாதயாத்திரை
அதிருப்தி குழு டில்லி சென்றது குறித்து, பெங்களூரில் விஜயேந்திரா நேற்று அளித்த பேட்டியில், ''எத்னால் உள்ளிட்ட தலைவர்களுக்கு நல்லது நடக்கட்டும். மேலிட தலைவர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர்.
''கட்சியை கட்டமைக்க உழைத்து வருகிறேன். 'முடா' விவகாரத்தில் பெங்களூரில் இருந்து மைசூரு வரை பாதயாத்திரை நடத்தியது யார். பாதயாத்திரை மூலம் முதல்வரை கட்டி போட்டு உள்ளோம்,'' என்றார்.