பா.ஜ., ஆட்சி மீது 40 சதவீத கமிஷன் ஒப்பந்ததாரர் அம்பிகாபதி வழக்கு தள்ளுபடி
பா.ஜ., ஆட்சி மீது 40 சதவீத கமிஷன் ஒப்பந்ததாரர் அம்பிகாபதி வழக்கு தள்ளுபடி
ADDED : நவ 19, 2024 06:33 AM
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்தம் பெறுவதற்கு 40 சதவீத கமிஷன் வாங்கியதாக பா.ஜ.,வினர் மீது ஒப்பந்ததாரர் அம்பிகாபதி தொடர்ந்த வழக்கை லோக் ஆயுக்தா போலீசார் தள்ளுபடி செய்துள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த பா.ஜ., ஆட்சியில், பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்தம் பெறுவதற்காக, 40 சதவீதம் கமிஷன் பெறப்பட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது பற்றி ஒப்பந்ததாரர் அம்பிகாபதி உட்பட பல ஒப்பந்ததாரர்கள் குற்றஞ்சாட்டினார். லோக் ஆயுக்தா போலீசார் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையில், 2023ம் ஆண்டில் அம்பிகாபதி இறந்துவிட்டார். லோக் ஆயுக்தா போலீசார் விசாரணையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்த ஒப்பந்தமும் வாங்கவில்லை. அவரது மகனுக்கு இது பற்றி எதுவும் தெரியவில்லை. போதுமான ஆதாரங்கள் இல்லாததால், வழக்கை போலீசார் தள்ளுபடி செய்துள்ளனர்.
இதனால், கர்நாடக, பா.ஜ.,வினர் சந்தோஷம் அடைந்தனர்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ''லோக் ஆயுக்தா போலீசாரே குற்றச்சாட்டுகளை பொய் என கூறிவிட்டனர். இந்த வழக்கால் எந்த பயனும் இல்லை,'' என்றார்.
மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில், ''எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்றார்.
காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், 'கடந்த பா.ஜ., ஆட்சியில் 40 சதவீத கமிஷன் முறைகேடு குறித்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
'இது தெரியாமல், ஒரேயொரு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதை பா.ஜ.,வினர் குதுாகலிக்க வேண்டாம்' என்றனர்.