ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக போராட்டம் முகமூடிகளை வினியோகிக்கும் பா.ஜ.,
ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக போராட்டம் முகமூடிகளை வினியோகிக்கும் பா.ஜ.,
ADDED : நவ 19, 2024 07:48 PM
ஆனந்த்விஹார்:ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக ஆனந்த் விஹார், ஐ.டி.ஓ.,வில் டில்லி பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாசு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு முகமூடிகளை வினியோகித்தனர்.
நகரின் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மாநில ஆம் ஆத்மி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, டில்லி பா.ஜ., குற்றஞ்சாட்டி வருகிறது.
நகரின் மிகவும் மாசுபட்ட பகுதிகளான ஆனந்த் விஹார், ஐ.டி.ஓ., பகுதிகளில் பா.ஜ.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆனந்த் விஹாரில் நடந்த விழிப்புணர்வு மற்றும் முகமூடி வினியோக நிகழ்ச்சிக்கு பா.ஜ., மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முதல்வர் ஆதிஷியை கடுமையாக சாடினார். மாசு நெருக்கடியை நிவர்த்தி செய்வதில் அரசாங்கத்தின் செயலற்ற தன்மையைக் குற்றஞ்சாட்டினார்.
அவர் பேசியதாவது:
டில்லி மக்கள் மூச்சுத் திணறலுக்குப் போராடுகிறார்கள். அதே நேரத்தில் கெஜ்ரிவாலும் ஆதிஷியும் பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசாங்கத்தைப் பாதுகாக்கிறார்கள். அங்கு அறுவடை நிலங்கள் எரிப்பதால் தேசிய தலைநகர் திணறுகிறது. சேதமடைந்த சாலைகள் மற்றும் துாசி மாசுபாடு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஐ.டி.ஓ.,வில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் கோயல் பங்கேற்றார். அவர் பேசியதாவது:
ஆம் ஆத்மி அரசாங்கம், நகரில் தொடர்ந்து வரும் அபாயகரமான காற்றிற்கு எதிராக போராடும் மக்களுக்கு உதவத் தவறிவிட்டது.
டில்லியின் மாசுபாட்டை திறம்பட நிவர்த்தி செய்ய கெஜ்ரிவாலுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டைச் சமாளிக்க தீவிர நடவடிக்கைகள் எடுப்பதற்கு பதிலாக ஆம் ஆத்மி அரசாங்கம் வார்த்தைகளால் விளையாடி வருகிறது.
டில்லியின் சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 500ஐத் தொட்டுள்ளது. சில இடங்களில் 1133ஐ எட்டியுள்ளது.
ஆம் ஆத்மி அரசு டில்லியை எரிவாயு அறையாக மாற்றியுள்ளது. மேலும் மாசு காரணமாக நகரத்தில் உள்ள மக்கள், காலை நடைப்பயிற்சிக்கு வெளியே செல்ல முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆனந்த் விஹார், ஐ.டி.ஓ.,வில் ஆர்ப்பாட்டத்தின்போது, பொதுமக்களுக்கு முகமூடிகளை பா.ஜ.,வினர் வினியோகித்தனர்.