ADDED : பிப் 27, 2024 08:16 AM

பெங்களூரு : லோக்சபா தேர்தல் பா.ஜ., பொறுப்பாளர் ராதா மோகன் தாஸ் அகர்வால், தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி, பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
லோக்சபா தேர்தல் கர்நாடக பா.ஜ., பொறுப்பாளராக அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ராதா மோகன் தாஸ் அகர்வால், கடந்த மாதம் நியமிக்கப்பட்டார்.
இவர், ஒன்றரை மாதமாக கர்நாடகாவிலேயே தங்கியுள்ளார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவர், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நெருங்கிய நண்பர்.
கடந்த மூன்று நாட்களாக, லோக்சபா தொகுதி வாரியாக கட்சி பிரமுகர்களை சந்தித்து, வெற்றி வியூகத்தை சொல்லி கொடுக்கிறார். தேசிய தலைவர்கள் பிறப்பிக்கும் உத்தரவை, மாநில தலைவர்களிடம் சொல்லி செயல்படுத்தி வருகிறார்.
இதே வேளையில், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களின் மனநிலை எப்படி உள்ளது; யாருக்கு செல்வாக்கு உள்ளது; வாக்காளர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்; காங்கிரஸ் அரசின் தோல்விகளை எப்படி விளக்குவது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்து வருகிறார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட எந்தெந்த தொகுதியில், எந்தெந்த தலைவர்கள் பிரசாரம் செய்தால், கட்சிக்கு பலம் சேர்க்கும் என்ற தகவல்களையும் பெற்று, கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வருகிறார்.
